ஜூலை 28 – மரக்காலால் மூடாதீர்கள்!
“விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்” (மத். 5:15).
இரட்சிக்கப்படும்போது கர்த்தர் உங்களுடைய உள்ளத்தில் அந்த அக்கினி தீபத்தை ஏற்றி வைக்கிறார். ஆனால் கர்த்தர் கொடுத்த இரட்சிப்பை, அவர் பாராட்டின கிருபையை நீங்கள் மூடி வைக்கக்கூடாது. உங்களுக்குள் அடக்கி வைத்துவிடக்கூடாது. இங்கே மரக்காலிலே மூடி வைப்பதைப் பார்க்கிறோம்.
மரக்கால் என்பது வியாபாரத்தையும், தொழிலையும் குறிக்கிறது. இன்றைக்கு அநேகர் பணம் சம்பாதிக்கவேண்டுமென்ற ஆசையால், வியாபாரம், தொழில் என்று இரவு பகலாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். வேத வாசிப்புக்கோ, ஜெபத்துக்கோ, ஆராதனைக்கோ அவர்களுக்கு நேரமிருப்பதில்லை. மரக்கால் விளக்கை மூடுகிறது. அக்கினியை அவித்துப்போடுகிறது.
இரண்டாவதாக, மரக்கால் என்பது அளந்துபோடும் ஒரு அளவையாகும். நீங்கள் தானியங்களையும் மற்றக் காரியங்களையும் அளப்பது நல்லதுதான். ஆனால் ஊழியர்களையும், விசுவாசிகளையும் அளந்துபார்த்து குறை கூறும்போது, உங்களுக்குள்ளே உள்ள தீபம் அணைந்துவிடும்.
கர்த்தர் சொல்லுகிறார்: “இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?” (மத். 7:4). இன்றைக்கு அநேக விசுவாசிகள் தங்களை சீர்ப்படுத்திக்கொள்ளுவதைப்பற்றி யோசிக்காமல் மற்றவர்களை ஆராய்ந்து, அளந்து, கண்டபடி பேசி தங்கள் கிருபைகளை இழக்கிறார்கள். “எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (மாற். 4:24) என்று இயேசுகிறிஸ்து எச்சரித்திருக்கிறாரே.
மற்றவர்களிடம் குறை கண்டுபிடிப்பதை விட்டுவிடுங்கள். குற்றஞ்சாட்டுவதை விட்டுவிடுங்கள். வாயின் வார்த்தைகளை ஒருபோதும் பட்டயமாகப் பயன்படுத்தாதிருங்கள். வேதம் சொல்லுகிறது, “நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்” (நீதி. 6:2).
“நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்” (2 கொரி. 10:13) என்று அப். பவுல் எழுதுகிறார்.
நீங்கள் விளக்கை மரக்காலால் மூடி வைக்காமல் விளக்குத் தண்டின்மேல் வையுங்கள். விளக்குத் தண்டு என்பது கிறிஸ்துவைக் குறிக்கும். அப்பொழுது உங்களுடைய வீடு முழுவதும் பிரகாசிக்கும். வீடு என்பது தனிப்பட்ட முறையில் உங்கள் உள்ளத்தையும், பின்பு உங்கள் குடும்பத்தையும், சபையையும் குறிக்கும். உங்களுக்குள் இருக்கிற அக்கினி தீபத்தாலே நீங்கள் செல்லுகிற சபையும் எழுப்புதல் அடைந்து பிரகாசமடையும்.
தேவபிள்ளைகளே, நீங்கள் ஒரு அக்கினி ஜுவாலை என்பதால் பற்றிப்பிடித்துப் பரவுங்கள்.
நினைவிற்கு:- “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்” (மத். 5:14,15).