ஜூலை 23 – அறிவின் வரம் பெறுவான்!
“அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்” (யோவா. 7:17).
தேவனுடைய சித்தத்தின்படி ஒருவன் செய்ய தன்னை முற்றிலுமாய் அர்ப்பணிக்கும்போது, அவனுக்குப் பல ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட மனிதனுக்கு தேவனுடைய ஞானமும், தேவனுடைய அறிவும் உண்டாவது அவ்வாசீர்வாதங்களிலே ஒன்றாகும். அறிவை உணர்த்துகிற வரம் அவனிலே கிரியை செய்கிறது.
காயீனும், ஆபேலும் சகோதரர்கள். ஒருநாள் அவர்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்த விரும்பினார்கள். காயீன் ஏதோ ஒன்றை காணிக்கையாக கொடுக்கவேண்டுமென்று காய்கறிகளைக் கொண்டுவந்தான். ஆனால் ஆபேலோ தேவ சித்தத்தின்படி கர்த்தருக்குக் காணிக்கை கொடுக்க விரும்பினான்.
ஆகவே, கர்த்தருக்குப் பிரியமான காணிக்கை எது, எதை அவர் அங்கீகரிப்பார், எது அவரை சந்தோஷப்படுத்தும் என்று அவன் யோசித்தான். தன்னுடைய உள்ளத்தை கர்த்தருடைய உள்ளத்தோடு இணைத்து, தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை ஆட்டுக்குட்டியாக இந்த உலகத்திற்குக் கொடுக்கப்போகிறதை அறிந்து ஒரு ஆட்டுக்குட்டியை பலி செலுத்தினான். ஆகவே அந்த பலியை கர்த்தர் அங்கீகரித்தார். அது மேன்மையான காணிக்கையாக விளங்கினது.
தேவ சித்தத்தின்படி செய்ய எந்த மனிதன் தன்னை ஒப்புக்கொடுக்கிறானோ, அவன் தேவனுடைய உள்ளத்தை அறிந்துகொள்ளுவான். சரியான உபதேசத்தை அறிந்துகொள்ளுவான். தான் நடக்கவேண்டிய பாதையை அறிந்துகொள்ளுவான். பரத்திலிருந்து வருகிற வெளிப்பாட்டு வரங்களை நிச்சயமாகவே அவன் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளுவான்.
கிறிஸ்தவ வாழ்க்கையில் உபதேசங்கள் மிகவும் அவசியம். அவை நம் ஆவிக்குரிய ஜீவியத்திற்கு அஸ்திபாரம்போல இருக்கின்றன. இளம்பயிருக்குத் தேவையான மழையைப்போல இருக்கின்றது. கர்த்தர் சொன்னார், “மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்” (உபா. 32:2).
அதே நேரம், நாம் எச்சரிப்புடனிருக்கவேண்டிய கள்ள உபதேசங்களும் இருக்கின்றன. ஓநாயைப்போன்ற அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு வருகிறார்கள். வேதப்புரட்டர்களும் அந்திக்கிறிஸ்துகளும் எழும்பி வஞ்சிக்கத்தக்க அற்புதங்களைக் காண்பிக்கிறார்கள். ஆனால் எந்த ஒரு மனுஷன் தேவசித்தத்தைச் செய்ய தன்னை ஒப்புக்கொடுக்கிறானோ, அவன் ஒருநாளும் வழிவிலகிப் போகமாட்டான். சரியான உபதேசத்தைக் கண்டுகொள்ளுவான்.
நாம் தேவ சித்தத்தை அறிவதற்கு நம் இருதயத்தைத் திருப்பும்போது, கர்த்தர் தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை நமக்கு அறிவிப்பார் (எபே. 1:10). மற்ற யாருக்கும் வெளிப்படுத்தாத பரலோக இரகசியங்களை கர்த்தர் அப். பவுலுக்கு வெளிப்படுத்தக் காரணம் என்ன? “ஆண்டவரே நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர்?” (அப். 9:6) என்று சொல்லி தேவசித்தத்திற்கு தன்னைப் பரிபூரணமாக ஒப்புக்கொடுத்ததேயாகும்.
தேவபிள்ளைகளே, தேவசித்தத்தின்படி நடக்க உங்களை ஒப்புக்கொடுங்கள்.
நினைவிற்கு:- “வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்” (ஏசா. 45:4).