ஜூன் 30 – தாழ்த்துங்கள்!
“அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (1 பேது. 2:23).
“ஆண்டவரே, நான் ஒரு புழு, பூச்சி. ஆண்டவரே, நான் தூசியிலும் அழுக்கான தூசி” என்றெல்லாம் சொல்லி ஒரு தாயார் ஆலயத்திலே ஜெபித்தார்கள். ஒரு வாலிபன் கேலியாக, “பாட்டி, நீ உண்மையிலேயே ஒரு புழுவா? ஒவ்வொரு வாரமும் இதே ஜெபம்தானா? இது உண்மையான ஜெபமா அல்லது பொய்யான ஜெபமா?” என்று கேட்டான்.
அந்த வயதான பெண்மணிக்கு வந்ததே கோபம். என்னைப் பாட்டி என்றா கூப்பிட்டாய், எனக்கு என்ன வயதாகிவிட்டதா, என்னை நீ கேலியா செய்கிறாய் என்று சொல்லி பயங்கரமாய்க் கோபப்பட்டு எரிச்சலடைந்தார்கள். அந்த வாலிபப்பையன் இன்னும் அவர்களை கேலி செய்தபடி, “பாட்டி, நீங்கள் புழுவோ, பூச்சியோ அல்ல, நீங்கள் பாம்பு. சீறுகிற நல்ல பாம்பு” என்று சொன்னான். எல்லோரும் சிரித்துவிட்டார்கள்.
பாம்பும் புழுவும் பூமியிலே வாழ்ந்தாலும், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. புழு சீறுவதில்லை. பாம்பு சீறும்போது பயங்கரமாக சத்தமிட்டு மற்றவர்களைப் பயமுறுத்தும். ஆனால் புழுவோ தாழ்மையுடனும், பணிவுடனும் அமைதியாய் சென்றுவிடும். அதை மிதித்தாலும் சத்தம் போடுவதில்லை. அதைக் கொன்றாலும் வாயைத் திறப்பதில்லை. அதற்கு கோபமோ, எரிச்சலோ, பழிவாங்கும் சுபாவமோ ஒன்றும் கிடையாது.
நமக்கு முன்மாதிரியான கிறிஸ்துவை நோக்கிப்பாருங்கள். சிலுவையின் அடிவாரத்தில் அவர் எவ்வளவோ அமைதியாக இருந்தார். வேதம் சொல்லுகிறது, “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசா. 53:7).
மற்றவர்கள் உங்களை எரிச்சலூட்டும்போதும், கோபப்படுத்தும்போதும் இயேசுகிறிஸ்துவையே நினைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் அவரை சிலுவையிலே அறையும்போதுகூட கோபமான வார்த்தைகளையோ, எரிச்சலான வார்த்தைகளையோ அவர் பயன்படுத்தவில்லை. “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்றுதான் வேண்டிக்கொண்டார். சிலுவையில் பெரும்பாலான நேரங்கள் மௌனமாகவே இருந்தார். அவருடைய நியாயம் புரட்டப்பட்டபோது தன்னுடைய நியாயத்திற்காக அவர் வாதாடவில்லை.
உங்களுடைய வாழ்க்கையிலே வருகிற கோபங்களையும், எரிச்சல்களையும் சிலுவையிலே அறைந்துவிடுங்கள். அவைகளைத் தலைதூக்கவிடாதிருங்கள். வேதம் சொல்லுகிறது, “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்” (கலா. 5:24-26).
தேவபிள்ளைகளே, சில வேளைகளிலே பாம்பின் தன்மைகள் உங்களுக்குள்ளிருந்து வெளிவரக்கூடும். அப்பொழுதெல்லாம் இயேசுவை நினைத்துக்கொண்டு ஒரு புழுவைப்போல உங்களைத் தாழ்த்துங்கள்.
நினைவிற்கு:- “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” (பிலி. 2:5).