Appam, Appam - Tamil

ஜூன் 29 – நானோ ஒரு புழு!

“நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன் (சங். 22:6).

அநேக பரிசுத்தவான்கள் தேவ சமுகத்தில் தங்களைத் தாழ்த்தும்போது, புழு என்றும், பூச்சி என்றும், தூசி என்றும், அற்பமும் குப்பையுமானவர்கள் என்றும், அகால பிறவி என்றும் சொல்லி தங்களைத் தாழ்த்துகிறார்கள்.

ஆபிரகாம் தன்னைத் தாழ்த்தியபோது, “இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்” (ஆதி. 18:27) என்றார். மோசே தன்னைத் தேவ சமுகத்தில் தாழ்த்தி, “நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன் என்றான்” (யாத். 4:10).

எரேமியா சொல்லுகிறார், “ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன். ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக என்றார்” (எரே. 1:6).

ஆம், தங்களைத் தாழ்த்தினவர்களைக் கர்த்தர் பயன்படுத்தினார். கர்த்தரால் ஒரு பூச்சியை இயந்திரமாக மாற்றிப் பயன்படுத்த முடியும். தாவீது இராஜா அபிஷேகம்பண்ணப்பட்டபோதிலும்கூட ராஜ்யபாரம் அவருக்குக் கிடைக்கவில்லை. அவரை சவுல் ஒரு கௌதாரியை வேட்டையாடுவதுபோலத் துரத்திக்கொண்டே வந்தார். மனம் உடைந்துபோன தாவீது, ‘நான் மனுஷன் அல்ல, நான் ஒரு புழு, மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்’ என்றார்.

இன்றைக்கு நீங்களும்கூட அப்படி நிந்திக்கப்பட்டும், அவமதிக்கப்பட்டும் மனுஷரால் அற்பமாய் எண்ணப்பட்டுமிருக்கலாம். யாரும் உங்களை நேசிக்காமல் இருக்கலாம். ஆனால் உங்களையும் நேசிக்கிற ஒருவர் உண்டு. உங்கள்மேல் அன்பு பாராட்டி உங்களுக்காக பரலோகம் துறந்து பூமிக்கு வந்த ஒருவர் உண்டு. அவர்தான் இயேசு கிறிஸ்து.

ஒரு மண் புழுவை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடைய நிலைமை எவ்வளவு பரிதாபமானது! அதனால் ஒரு பறவைப்போல வானவெளியிலே பாடித்திரிய முடியாது. மற்ற மிருகங்களைப்போல ஓடித்திரியவும் முடியாது.

கர்த்தருடைய சிருஷ்டிப்பில் யானையும் ஒன்று. அது எவ்வளவு கெம்பீரமாய்த் தன் துதிக்கையை ஆட்டிக்கொண்டு அழகான தந்தங்களோடு நடக்கிறது! சிங்கங்கள் வீரர்களைப்போல தலைநிமிர்ந்து நிற்கின்றன. ஆனால் இந்தப் புழுவின் நிலைமையோ பரிதாபம். காலூன்றி ஆடுமாடுகளைப்போல நடக்க முடியாது. தரையில் ஊர்ந்து செல்லும்போது நடப்பவர்களால் மிதிக்கப்படுகிறது. அதற்கு சத்தம்கூட இல்லை.

ஆனால் புழுவைப்போல் இருக்கிற உங்களையும் என்னையும் கர்த்தர் விசாரிக்கிறவராய் இருக்கிறார். பேதுரு சொல்லுகிறார், “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேது. 5:7).

மட்டுமல்ல, அவர் அன்பு செலுத்துகிற ஆண்டவராயும் இருக்கிறார். மனுஷனை நினைத்து விசாரிக்க அவன்மேல் அக்கறைகொண்டு அவனை அரவணைத்துப் பாதுகாக்க கர்த்தர் கிருபையுள்ளவராய் இருக்கும்போது, நீங்கள் ஏன் கலங்கவேண்டும்? ஏன் கண்ணீர் சிந்தவேண்டும்?

நினைவிற்கு:- “அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்ட வள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரே. 30:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.