Appam, Appam - Tamil

ஜூன் 05 – மவுனம்!

“நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன் (சங். 39:2).

பேச ஒரு காலம் உண்டு என்றும், மவுனமாய் இருக்க ஒரு காலம் உண்டு என்றும் பிரசங்கி சொல்லுகிறார் (பிர. 3:7). எப்போது மவுனமாய் இருக்க வேண்டுமோ, அப்பொழுது நாம் மவுனமாய் இருந்துதான் ஆகவேண்டும்.

கத்தோலிக்கத் திருச்சபை மடங்களிலே சில மடங்கள் மவுன சாமியார் மடங்கள் என்று அழைக்கப்படுகிறது. அங்கே உள்ள கிறிஸ்தவ துறவிகள் யாரிடமும் பேசுவது இல்லை. பல மாதங்கள் அவர்கள் பேசாமல் அப்படியே இருக்கிறார்கள். நான் இஸ்ரவேல் தேசத்திற்கு போயிருந்தபோது எலியா ஒளிந்திருந்த கேரீத் ஆற்றண்டையில் அப்படிப்பட்ட மவுன விரதம் இருக்கும் சாமியார்கள் உள்ள மடத்தைக் கண்டேன். எலியா கேரீத் நிரூற்றண்டையில் மவுனமாய் இருந்ததுபோலவே தாங்களும் மவுனமாய் இருப்பதாக அவர்கள் விரதம் பூண்டிருக்கிறார்கள்.

பழைய ஏற்பாட்டை நாம் வாசித்துப் பார்த்தால் பாவத்திற்காகத் துக்கப்படுகிறவர்கள் அமைதியாய் தங்கள் தலைகளின்மேல் புழுதியையோ அல்லது சாம்பலையோ வாரிப்போட்டுக்கொள்ளுவதையும், இரட்டுடுத்திக் கொள்ளுவதையும், தங்களைச் சுத்திகரிக்கும் நாளாக அந்த நாளைப் பயன்படுத்துவதையும் காணலாம்.

வேதம் சொல்லுகிறது, “சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மௌனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” (புல. 2:10). தங்களைத் தாங்களே ஒடுக்கி மவுனமாய் இருக்கும் உபவாசத்தைக் கர்த்தர் காண்கிறார். அவர்களுடைய சிறையிருப்பை எல்லாம் மாற்றுகிறார். அவர்களுடைய கண்ணீரை ஆனந்தக் களிப்பாக்கிவிடுகிறார்.

தாவீது தன் வாழ்நாளில் மவுனத்தின் நாளைத் தெரிந்துகொண்டு அந்த நாளில் கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து அமைதியாய் தியானிக்க ஆரம்பித்தார். அந்த மவுனம் தியானத்திற்கு ஏற்றதாய் இருந்தது. அந்த மவுனம் உலகச் சத்தத்திற்கு காதுகளை அடைத்து கர்த்தருடைய சத்தத்திற்கு உள்ளத்தைத் திறக்கிற நேரமாய் இருந்தது. அப்பொழுதெல்லாம் அவருடைய ஆவியிலே அவர் அனல்கொண்டார்.

இப்பொழுதெல்லாம் பல வகையான விளம்பரச் சத்தங்கள் காதுகளில் விழுந்துகொண்டேயிருக்கின்றன. அந்த சத்தங்கள் மனிதனுடைய வாழ்க்கையை தங்கள் விருப்பப்படி வளைத்துக்கொள்ளுகின்றன. பல சத்தங்கள் நம்முடைய காதுகளில் இடைவிடாமல் தொனிக்கிறதினால் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க போதுமான தருணம் இல்லாமல் போய்விடுகிறது. கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க சில மவுன நேரங்களை உங்களுக்கென்று ஒதுக்கிக்கொள்ளுங்கள். அமைதியாய் ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய பொன்முகத்தை நோக்கிப்பாருங்கள்.

ஒரு முறை பாவியான ஒரு ஸ்திரீ இயேசுவண்டை வந்தாள். கண்ணீரால் அவருடைய பாதங்களை நனைத்தாள். அவளுடைய வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவே இல்லை. கண்கள் மட்டும் கண்ணீரை கொட்டிக்கொண்டே இருந்தன. கர்த்தர் அவளுடைய பாவங்களை மன்னித்தார். ‘மகளே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது’ என்று அன்போடு சொன்னார். தேவபிள்ளைகளே, கர்த்தருக்காக பிரதிஷ்டை செய்யப்படும் மவுனம் உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.

நினைவிற்கு:- “கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது” (ஆப. 2:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.