Appam, Appam - Tamil

ஜூன் 02 – சிவப்புநூல் கயிறு!

“நீ இந்தச் சிவப்புநூல் கயிற்றை …. ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள் (யோசு. 2:17).

ராகாப் என்ற பெண்மணியின் குடும்பம் முழுவதையும் அழிவினின்று பாதுகாத்த இஸ்ரவேலர் அவருக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ஆலோசனை உண்டு. “உன் ஜன்னலிலே சிவப்பு நூல் கயிற்றை கட்டி வை” என்பதே அது. அது ஒரு அடையாளம். ராகாப் குடும்பத்தினர் அனைவரையும் எரிகோவின் அழிவினின்று பாதுகாக்கக்கூடிய உடன்படிக்கையின் அடையாளம்.

ராகாப் வேசியாக இருந்தபோதிலும், பாவ வாழ்க்கையில் சம்பாதிக்கிறவளாக இருந்தபோதிலும் அவளுக்கு கர்த்தரைக்குறித்த ஒரு தரிசனம் இருந்தது. அவள் சொன்னாள்: “கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில்பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன். உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்” (யோசு. 2:9,11).

ராகாப் கட்டிவைத்த அந்தச் சிவப்பு நூல், இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தத்தையே குறிக்கிறது. அவருடைய இரத்தமே நம்மை உன்னதமானவரின் மறைவில், சர்வவல்லவரின் நிழலில் பாதுகாக்க வல்லமையுள்ளதாய் இருக்கிறது. அவருடைய இரத்தமே, கோட்டையாக நின்று, மதிலாக சூழ்ந்து, நம்மை மறைத்துக்கொள்கிறது. “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்” என்று திரும்பத்திரும்ப சொல்லும்போது, கிறிஸ்துவின் அடைக்கலத்திற்குள்ளே நாம் இருக்கிறோம் என்ற விசுவாசம் நமக்குள்ளே ஏற்படுகிறது.

எகிப்து தேசம் எங்கும் சங்கார தூதன் புறப்பட்டு வந்தபோது, எந்தெந்த வீடுகளிலே ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் அடையாளத்தை கண்டானோ, அந்தந்த வீடுகளை விட்டு விலகிப்போனான். எந்தெந்த வீடுகளில் அந்த இரத்தத்தின் அடையாளம் இல்லையோ, எந்தெந்த வீட்டின் நிலைகளில் அந்த இரத்தம் பூசப்படவில்லையோ, அந்த வீடுகளிலெல்லாம் சங்காரத்தை ஏற்படுத்தினான். தலைச்சன் பிள்ளைகள் மரித்தார்கள், மிருக ஜீவன்கள் மரித்தன (யாத். 12:22,23). ஆகவே நாம் எப்பொழுதும் நம்மை கிறிஸ்துவின் இரத்தத்திற்குள்ளே மறைத்துக்கொள்ளவேண்டும்.

அப். பவுல் தமது நிருபத்தை எழுதும்போது, “பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது” என்று எழுதுகிறார் (1 பேது. 1:2). யார் யார் மேல் கிறிஸ்துவின் இரத்தத்தின் முத்திரை இருக்கிறதோ, அவருடைய இரத்தமாகிய உடன்படிக்கையின் அடையாளம் இருக்கிறதோ அவர்களை உலகமும், மாமிசமும், பிசாசும் தொடவே முடியாது. சாத்தான் எய்யும் எந்த அக்கினியாஸ்திரங்களும் அவர்களை நெருங்கவே முடியாது.

நாம் சிலுவையண்டை வரும்போது, “நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” (எபி. 12:24). அந்த இரத்தத்தினாலே நம்முடைய பாவங்கள் கழுவப்படுகின்றன. அக்கிரமங்கள் மன்னிக்கப்படுகின்றன. சாபத்தின் முதுகெலும்பு முறிக்கப்படுகிறது. வியாதிகள் நீங்குகின்றன. சாத்தானின் தலை நசுக்கப்படுகிறது. மட்டுமல்ல, நம் ஜீவன் தப்புவிக்கப்படுகிறது.

நினைவிற்கு:- “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்” (வெளி. 12:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.