ஜூன் 15 – புகழ்ச்சி!
“தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்” (2 கொரி. 10:18).
புகழ்ச்சி பல வகைப்படும். தன்னைத்தான் புகழுகிற தற்புகழ்ச்சி உண்டு. மற்றவர்களிடம் நன்மை பெறும்படி அவர்களை வஞ்சகமாகப் புகழுவதுமுண்டு. அதே நேரம், கர்த்தரால் வரும் மேன்மையான புகழ்ச்சியும் உண்டு. ஆம், கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
ஒரு நாள் அப். பவுல் கொரிந்து சபையைப் பார்த்தார். ஒரு பக்கம், ஒரு வரத்திலும் குறைவில்லாமல் சகலவற்றிலும் தேர்ச்சிபெற்ற சபையாக அது விளங்கினது. ஆவிக்குரிய வரங்களை செயல்படுத்தின சபையாக விளங்கினது. மறுபக்கத்திலோ, தங்களைத் தாங்களே புகழ்ந்து மெச்சிக்கொள்ளுகிற தற்புகழ்ச்சிக்காரரும் அங்கே இருந்தார்கள். இயேசுகிறிஸ்து சொன்னார், “எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ” (லூக். 6:26).
சிலர் தங்களை மனுஷர் புகழவேண்டுமென்றே தான தருமங்களைச் செய்கிறார்கள். ஆலயங்களுக்கு பெரிய நன்கொடை கொடுத்து தங்களுடைய பெயர் வெளிவரவேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆலயங்களுக்கு மேஜை, நாற்காலி, விளக்கு ஆகியவற்றை வாங்கிக்கொடுக்கும்போது தங்களுடைய பெயரை அதிலே பொறித்துக் கொடுக்கிறார்கள். இவர்கள், உலகத்திலே தங்களுடைய புகழ்ச்சியின் பலனை அடைந்துவிட்டபடியினால் பரலோகத்திலே அவர்களுக்கு புகழ்ச்சி இல்லாமல் போய்விடுகிறது.
கர்த்தர் உள்ளத்தின் நோக்கங்களை அறிகிறவர், தற்புகழ்ச்சிக்காக செய்யப்படுகிற தானதருமங்கள் ஒன்றையும் அவர் அங்கீகரிப்பதில்லை. ஆகவே நீங்கள் எதைச் செய்தாலும் மனுஷருடைய புகழ்ச்சிக்காகச் செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்யக்கடவீர்களாக. அப்பொழுது அந்தரங்கத்தில் காண்கிற ஆண்டவர் வெளியரங்கமாய் உங்களுக்குப் பதிலளிப்பார்.
“அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே” (உபா. 10:21). அந்த கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கும் ஒரு வாக்களிக்கிறார். “நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும் புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்” (உபா. 26:19) என்கிறார்.
கர்த்தர் நம்மை மேன்மைப்படுத்தி புகழும்போது மனுஷரால் ஒருநாளும் நம்மை தாழ்த்திவிடமுடியாது. நம்முடைய பெயரைக் கெடுக்கவோ, அவதூறாய்ப் பேசவோ முடியாது. ஆபிரகாமிடம் கர்த்தர், “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி. 12:2) என்றார்.
இயேசுகிறிஸ்துவின் முன்மாதிரியான வாழ்க்கையை நோக்கிப்பாருங்கள். அவர் மனுஷருடைய புகழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை. தன் பிதாவினால் புகழப்படுவதற்காகவே அவர் காத்திருந்தார். அன்றைக்கு இருந்த பரிசேயர், சதுசேயரைப் பார்த்து, “நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?” (யோவா. 5:41,44) என்று கேட்டார். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வாயே உங்களைப் புகழட்டும். அவரையே பிரியப்படுத்துங்கள்.
நினைவிற்கு:- “இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது” (ரோம. 2:29).