மே 16 – ஸ்தோத்திரிக்கிறேன்!
“என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்” (1தீமோ. 1:12).
“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்” என்று சொன்ன அப். பவுல், தானே எல்லாவற்றுக்காகவும் ஸ்தோத்திரம் செய்கிற முன்மாதிரியாக விளங்கினார். பிரச்சனைகளின் மத்தியிலும், போராட்டங்களின் மத்தியிலும் அவர் ஸ்தோத்திரம் செலுத்தினார்.
அவர் ரோமாபுரி சிறைச்சாலையில் போடப்பட்டபோதும் கர்த்தரைத் துதித்தார். இந்த துதி எப்பொழுதும் அவருடைய வாயில் இருந்தபடியினால்தான் அவருடைய சந்தோஷத்தை யாராலும் எடுத்துப்போட முடியவில்லை.
அவர் சிறைச்சாலையில் இருந்து பிலிப்பியருக்கு எழுதும்போது, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (பிலி. 4:4) என்று குறிப்பிட்டார். கர்த்தரை ஸ்தோத்திரிக்கிற மனுஷனால்தான் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கமுடியும்.
கோடிக்கனக்கான மக்கள் இருக்கும்போது கர்த்தர் அவருக்கு விசேஷமாகக் கொடுத்த பாவ மன்னிப்பு, இரட்சிப்பின் சந்தோஷம், நித்திய ஜீவன், தெய்வீக சந்தோஷம், தெய்வீக சமாதானம் ஆகிய விலையேறப்பெற்ற காரியங்களை அவர் ஒருமுறை எண்ணிப்பார்த்தபோது அவரால் துதிக்காமல் இருக்கவே முடியவில்லை. ஆனந்த பரவசம் அடைந்து, “தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லித் துதித்தார் (2 கொரி. 9:15).
இரட்சிப்புக்காக மட்டுமல்லாமல், “தன்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்” (1 தீமோ. 1:12) என்றும் அவர் சொல்லுகிறார். விசுவாசியாய் இருப்பதற்கே ஆயிரம் கோடி ஸ்தோத்திரங்கள் செலுத்தவேண்டுமானால், ஊழியக்காரராய் இருப்பதற்கு எத்தனை கோடி ஸ்தோத்திரங்களையும் துதிகளையும் அதிகமாய் ஏறெடுக்கவேண்டும்!
‘கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது மட்டுமல்ல, என்னை உண்மையுள்ளவன் என்றெண்ணி இந்த ஊழியத்தை என் கரத்தில் தந்தாரே! பல வேளைகளில் நான் உண்மையில்லாதவனாயிருந்தாலும் என்னை அழைத்தவரோ உண்மையுள்ளவராயிருக்கிறார், என்னையும் உண்மையுள்ளவனென்றெண்ணி இருக்கிறார்’ என்ற சிந்தனை அவரில் பளிச்சிட்டபோது அவரால் துதிக்காமல் இருக்கவே முடியவில்லை.
கர்த்தருடைய ஊழியத்திற்கென்று கர்த்தரால் தெரிந்தெடுக்கப்படுவது ஒரு சாதாரணமான காரியம் அல்ல. “ஆரோனைப்போல அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை” (எபி. 5:4) என்று வேதம் சொல்லுகிறது. டி. எல். மூடி என்ற பக்தன் ஓய்வுநாள் பாடசாலைக்கு பிள்ளைகளைக் கொண்டுசெல்லும் ஊழியத்தைதான் முதலில் செய்தார். கர்த்தர் அவரை கனம்பண்ணி, உயர்த்தி, மாபெரும் சுவிசேஷகராக ஏற்படுத்தினார் அல்லவா!
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுடைய கரத்தில் ஒரு ஊழியத்தைக் கொடுப்பாரானால் அதை மிகுந்த பயபக்தியோடும் உண்மையோடும் உத்தமத்தோடும் செய்வீர்களாக!
நினைவிற்கு:- “அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்” (வெளி. 22:4).