Appam, Appam - Tamil

மே 18 – சுக வாழ்வு!

“அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு, சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும் (ஏசா. 58:8).

சுகவாழ்வு கர்த்தரிடத்திலிருந்து நமக்கு கிடைக்கிறது என்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! வியாதியின்மேல் வியாதியும், தாங்க முடியாத பெலவீனங்களும் மனிதனுடைய வாழ்க்கையை ஒடுக்கும்போதுதான் சுகத்தின் அருமையையும் ஆரோக்கியத்தின் அருமையையும் அவன் உணர்ந்துகொள்ளுகிறான்.

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும். ஆரோக்கியமாக வாழுகிற மனிதன் கர்த்தர் கொடுத்த ஆரோக்கியத்தை எண்ணிப்பார்த்து கர்த்தருக்கு நன்றி சொல்லுவதில்லை. நோய் வந்து ஒடுக்கும்போதோ கர்த்தரை தூஷித்துவிடுகிறான். அவமதிக்கிறான். எனக்கு ஏன் இந்த வியாதி என்று முறுமுறுக்கிறான்.

நாம் ஆரோக்கியமுடையவர்களாய் விளங்கவேண்டும் என்பதுதான் கர்த்தருடைய நோக்கமும் சித்தமுமாயிருக்கிறது. கர்த்தர் நமக்கு தெய்வீக சுகத்தையும், தெய்வீக ஆரோக்கியத்தையும் வாக்களித்திருக்கிறார். நோய் வந்த பின்பு கர்த்தருடைய கிருபையால் நமக்கு கிடைப்பது தெய்வீக சுகம். வியாதியே வராமலிருப்பது தெய்வீக ஆரோக்கியம்.

“நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத். 15:26) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேவ ஊழியரான சைமன் ஸ்டான்லி என்பவர், 1953-ஆம் ஆண்டு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலே கல்வி பயின்றார். அவர் கல்லூரியிலே படிக்கும்போது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருடைய ஊழியத்திற்குத் தன்னை அர்ப்பணித்தார்.

அப்பொழுது அவர், “ஆண்டவரே நான் உம்முடைய ஊழியத்தை உண்மையும் உத்தமமுமாய் செய்ய விரும்புகிறேன். எனக்கு நோயோ, வியாதியோ, பெலவீனமோ வராதபடி காத்துக்கொள்ளும்” என்று மன்றாடினார்.

கர்த்தர் அவருடைய ஜெபத்தைக் கேட்டு தெய்வீக ஆரோக்கியத்தைத் தந்தார். அதன்பின் ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் உருண்டோடியபிறகும், நோயோ, வியாதியோ இல்லாமல் பூரண ஆரோக்கியமுள்ளவராய் வாழ்ந்துவந்தார். அவர் “சுகவாழ்வைக் கர்த்தர் எனக்குத் தந்ததால் ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறேன்” என்று சாட்சி பகர்ந்தார்.

சுகமான வாழ்க்கையை விரும்பினால்மட்டும் போதாது. நாம் அதற்கான நிபந்தனைகளை நிச்சயமாகவே நிறைவேற்றவேண்டும். அந்த நிபந்தனைகள் யாவை? முதலாவது, நாம் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை கவனமாய் கேட்கவேண்டும். இரண்டாவது, கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானவைகளைச் செய்யவேண்டும். மூன்றாவது, அவருடைய கட்டளைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும். நான்காவது, அவருடைய நியமங்கள் அனைத்தையும் கைக்கொள்ளவேண்டும்.

தேவபிள்ளைகளே, இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முன்வாருங்கள்.

நினைவிற்கு:- “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது” (எபே. 6:2,3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.