Appam, Appam - Tamil

மே 20 – கர்த்தருடைய வழியிலே நடத்துவார்!

“இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே (ஏசா. 48:17).

கர்த்தர் நடத்தும்படி நாம் நம்மை அவருடைய கரத்திலே ஒப்புக்கொடுக்கும்போது அவர் தேவசித்தத்தின்படியே நம்மை நடத்துவார். செம்மையான வழிகளிலே நடத்துவார். அவர் நடத்துகிறார் என்றால் கூடவே இருக்கிறார் என்றுதான் அர்த்தம். ஆகவேதான் தாவீது இராஜா, “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” (சங். 23:4) என்று சொன்னார்.

இன்று மனிதன் தன்னைத்தானே நடத்திக்கொள்ள முயற்சிக்கிறான். என்னை நடத்த வேறு ஒருவர் தேவையில்லை. ஞானம், அறிவு, புத்திக்கூர்மை ஆகிய அனைத்தும் தனக்கு இருக்கிறது என்று எண்ணுகிறான். அவனுக்கு செம்மையாக தோன்றுகிற வழிகள் முடிவில் மரண வழிகளாய் மாறுகின்றன. வேறு சிலரை பிசாசுகளும், அசுத்த ஆவிகளும் வழிநடத்துகின்றன. இச்சைகளின் ஆவிகளும், வேசித்தன ஆவிகளும், குடிவெறி ஆவிகளும் வழிநடத்துகின்றன.

யோசேப்பு இளைஞனாய் இருந்தபோது தேவனுடைய வழிநடத்துதலில் பல கேள்விகளை எழுப்பியிருக்கக்கூடும். ‘ஏன் என்னை என் சகோதரர்கள் மீதியானியருடைய கையிலே விற்றார்கள்? ஏன் நான் எகிப்துக்கு வந்தேன்? போத்திபாரின் வீட்டிலே உண்மையுள்ளவனாய் இருந்தேனே, என்மேல் ஏன் இத்தனை அநியாயமான குற்றச்சாட்டுகள்? ஐயோ சிறைச்சாலையிலே என் பிராணன் இரும்பில் அடைபட்டிருக்கிறதே! கர்த்தரா என்னை நடத்துகிறார்?’ என்று புலம்பியிருக்கக்கூடும். ஆனால், ஒரு நாள் கர்த்தர் எல்லாத் தீமையையும் மாறப்பண்ணினபோது கர்த்தரில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறதைப் புரிந்துகொண்டார்.

எகிப்து தேசத்திற்கு பிரதம மந்திரியாய் உயர்த்தப்பட்டபோது மகா பஞ்சகாலத்திலும் தன் குடும்பத்தினரைப் போஷிக்க திராணியுள்ளவராய் விளங்கும்படி கர்த்தரே தன்னை நடத்திச்சென்றதைப் புரிந்துகொண்டார். ஆகவே அன்போடு தன் சகோதரர்களை நோக்கி, ‘நீங்களல்ல, தேவனே என்னை இவ்விடத்திற்கு அனுப்பினார்’ என்று சந்தோஷத்தோடு கூறினார் (ஆதி. 45:5-8). யோசேப்பை வழிநடத்தினவர், தாவீதை வழிநடத்தினவர், தானியேலை வழிநடத்தினவர், ஒவ்வொரு பரிசுத்தவானையும் வழிநடத்திவருகிறவர், நிச்சயமாகவே உங்களையும் வழிநடத்துவார். ஆகவே எங்கே செல்வது, யாரிடம் போவது என்று மனம் கலங்காதிருங்கள்.

என்னுடைய தகப்பனாருடைய வாழ்க்கையை திரும்பிப்பார்க்கிறேன். ஆரம்பத்தில் அவர் ஒரு சிறிய மளிகைக்கடையில் வேலைசெய்தார். பின்பு ஓராண்டு காலம் ஆசிரியராய் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தில் வருமான வரித்துறையில் பதினாறு ஆண்டுகள் வேலை செய்ய கர்த்தர் கிருபை செய்தார். ஆவியானவர் அவரை வழிநடத்தி அவருடைய ஊழியத்தின்மேலே அவரை நிறுத்தினார். இதுவரை நடத்தினவர் இனியும் நடத்துவார் என்ற பலத்த விசுவாசமே கடைசிவரை அவருக்குள் இருந்தது. ஆம், தேவபிள்ளைகளே, அவர் வழிநடத்துகிற வல்லமை உள்ள தேவன். நிச்சயமாகவே உங்களையும் வழிநடத்துவார்.

நினைவிற்கு:- “உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்” (ஏசா. 50:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.