மே 22 – சத்தியத்துக்குள் நடத்துவார்!
“சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவா. 16:13).
உலகப்பிரகாரமான வாழ்க்கையில் கர்த்தர் நம்மோடு நடந்து, நம்மை வழிநடத்துகிறது மட்டுமல்லாமல், ஆவிக்குரிய பிரகாரமாகவும் நம்மை வழிநடத்துகிறார். நம்மை வழிநடத்துவதற்காகவே தேவன் சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை நமக்குத் தந்திருக்கிறார். அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் (யோவா. 16:13) என்று வேதம் சொல்லுகிறது.
சகல சத்தியத்திற்குள்ளும் நாம் வழிநடத்தப்பட்டால்தான் ஆத்துமாவிலே பூரணப்படமுடியும். ஏதோ ஒரு சத்தியத்தை மிகைப்படுத்துவதற்கென மற்ற சத்தியங்களை புறக்கணிப்போமானால் நாம் பூரணப்பட முடியாது. ஆகவே நம்மை நடத்துகிற கர்த்தர் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழிநடத்தும்படி சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்மூலமாக நம்மைப் போதித்து நடத்துகிறார்.
வேதபுத்தகமானது சத்திய வேதம் என்று அழைக்கப்படுகிறது. தேவகுமாரனாகிய இயேசுவும் சத்தியம் என்று அழைக்கப்பட்டார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவா. 14:6) என்று அவர் முழங்கிச் சொன்னார். அது போலவே ஆவியானவரும் சத்தியஆவி என்று அழைக்கப்படுகிறார் (யோவா. 16:13). நீங்கள் பூரண சத்தியத்திற்குள் வழிநடத்தப்படும்போது உங்களுடைய வாழ்க்கையிளெல்லாம் விடுதலை சம்பூரணமாயிருக்கும். வேதம் சொல்லுகிறது, “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவா. 8:32).
இந்திய தேசம் சுதந்திரம் பெற்றபோது தேசத்தின் முழக்கமாக எந்த வார்த்தையை தெரிந்தெடுக்கலாம் என்று தேசத்தலைவர்கள் ஆலோசனை செய்தார்கள். முடிவில் “சத்தியமேவ ஜெயதே” என்ற வார்த்தையை தெரிந்தெடுத்தார்கள். சத்தியம்தான் ஜெயம் பெறும். உலகத்தில் ஆயிரக்கணக்கான மதங்களும் மார்க்கங்களும் இருந்தாலும் சத்தியம்தான் ஜெயம் பெறும் என்பதே அதன் அர்த்தம். வேதத்தின்படி பார்த்தால் சத்தியமான இயேசுகிறிஸ்துதான் ஜெயம் பெறுவார்.
ஆகவே நாம் ஜெயம் பெறும்படி சத்தியமான கிறிஸ்துவினுடைய வழியிலும், சத்திய ஆவியானவர் வழிநடத்திச்செல்லுகிற பூரண சத்தியத்திற்குள்ளும் கடந்துவரவேண்டும். சத்தியமேவ ஜெயதே என்ற வார்த்தையை தமிழிலே வாய்மையே வெல்லும் என்று மொழிபெயர்த்தார்கள். வாய்மை என்ற வார்த்தைக்கு உண்மை என்பது அர்த்தம். நம்முடைய வாழ்க்கையிலே உண்மை அவசியம் தேவை. கொஞ்சத்தில் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் அநேகத்தின்மேல் அதிகாரியாக கர்த்தர் நம்மை வைத்தருளுவார்.
பிலாத்துவுக்குமுன்பாக இயேசு நின்றபோது, பிலாத்து இயேசுவைப் பார்த்து சத்தியமாவது என்ன என்று கேட்டார். இயேசு அந்த கேள்விக்கு பதில் சொல்லுகிறவரையிலும் பிலாத்துவினால் பொறுத்திருக்க முடியவில்லை. சத்தியத்தைக்குறித்து அறிய விரும்பினாலும் ஏற்றுக்கொள்ள அவருக்கு மனமில்லை. காரணம், அவர் தேவனைப் பிரியப்படுத்தாமல், மனுஷரைப் பிரியப்படுத்த விரும்பி, சத்தியமானவரை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார். இன்றைக்கும் அநேகர் சத்தியத்தை சிலுவையில் அறைந்துவிடுகிறார்கள்.
தேவபிள்ளைகளே, நீங்கள் சத்தியத்திற்காக வைராக்கியமாக நின்றால் சத்தியம் உங்களுக்காக வைராக்கியமாக நிற்கும்.
நினைவிற்கு:- “நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின” (யோவா. 1:17).