பெப்ருவரி 16 – விசுவாசத்தினால் ஜெயம்!
“தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவா. 5:4).
‘விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்’ என்று அப்போஸ்தலனாகிய யோவான் முழங்குகிறார். உலகத்தை ஜெயிக்கும்படியாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் உலகத்திற்குரியவர்கள் அல்ல. நாம் கர்த்தருடையவர்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அந்நியரும் பரதேசிகளுமாய் இந்த உலகத்தை வெற்றியோடு கடந்துசெல்லுகிறோம்.
மட்டுமல்ல, நாம் இந்த உலகத்தில் இருந்தாலும், உலகத்தில் இருப்பவனிலும் நம்மில் இருப்பவர் பெரியவராயிருக்கிறார். நம் தேவன் வல்லவர், நல்லவர், நம்மீது அன்புடையவர். நம் ஓட்டத்தை ஜெயமாய் முடியப்பண்ணுகிறவர்.
இந்த உலகத்தில் இருப்பவன் யார்? அவன்தான் சாத்தான். அவன் இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் என்று வேதம் அழைக்கிறது (2 கொரி. 4:4). அவன் மூலமாய் கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகியவை நம்மோடுகூட போராடுகின்றன.
இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி காண வேண்டாமா? லௌகீகத்தை ஜெயிக்க வேண்டாமா? இதற்கும் நமக்கு விசுவாசம் தேவை. அந்தகார வல்லமைகளோடும், வானமண்டலத்தின் பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் போரிட்டு ஜெயம் காணவேண்டாமா? இதற்கும் நமக்கு விசுவாசம் தேவை. நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
நமக்கு எப்படிப்பட்ட விசுவாசம் தேவை? கிறிஸ்து ஜெயவேந்தர் என்கிற விசுவாசம் தேவை. அவர் ஒருநாளும் தோல்வியடையமாட்டார் என்கிற விசுவாசம் தேவை. அவர் பெரியவர், வல்லவர் என்கிற விசுவாசம் தேவை. சாத்தானின் தலையை நசுக்கினவர், சாபத்தின் கூரை முறித்தவர், பாவத்திலிருந்து ஜெயம் தருகிறவர் என்ற விசுவாசம் தேவை.
மட்டுமல்ல, சாத்தான் கொண்டுவருகிற வியாதிகளைக் குணமாக்க தழும்புகளை ஏற்றுக்கொண்டவர் என்கிற விசுவாசம் நமக்குத் தேவை. வல்லமையுள்ள தேவனை நாம் நோக்கிப்பார்க்கும்போதெல்லாம் நமக்குள் விசுவாசம் ஒரு ஆறுபோல சுரந்து வருகிறது.
நீங்கள் ஒருபோதும் போராட்டத்தைப் பாராதிருங்கள். போராட்டத்தைக் கொண்டுவருகிற சாத்தானைப் பாராதிருங்கள். போராட்டத்தின் வலிமையைக் குறித்து எண்ணிக்கொண்டிராதிருங்கள். கர்த்தரை நோக்கிப்பாருங்கள். அவரை மகிமையுள்ளவராகவும், மகத்துவமுள்ளவராகவும் நோக்கிப்பாருங்கள். சேனைகளின் அதிபதியாய் நோக்கிப்பாருங்கள்.
தாவீது கோலியாத்தை நோக்கிப்பார்க்கவில்லை. இஸ்ரவேலின் இராணுவங்களின் தேவனை நோக்கிப்பார்த்தார். ஆகவே கர்த்தருடைய நாமத்தில் வருகிறேன் என்று அவரால் வெற்றிநடைபோட முடிந்தது. கோலியாத்தை சிறு கல்லினால் அடித்து வீழ்த்தமுடிந்தது.
நீங்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கும் உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயமாய் இருக்கிறது. துயரமான சூழ்நிலைகளா? மனச்சோர்வுகளா? கலக்கங்களா? அதைரியப்படாதீர்கள்! உங்களை வெற்றிசிறக்கப்பண்ணுகிறவர் ஜீவனுள்ளவராயிருக்கிறார். நீங்கள் தோல்வியடையப்போவதில்லை.
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்கள் தோல்விகளை ஜெயமாய் மாறப்பண்ணுவார். உங்கள் துக்கத்தைக் களிப்பாய் மாற்றுவார்.
நினைவிற்கு:- “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக” (கொலோ. 3:16).