பிப்ரவரி 03 – பிரியமானதைப் போதியும்
“உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக” (சங். 143:10).
நீங்கள் கர்த்தரை நோக்கி, “ஆண்டவரே உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்” என்று கேட்டு ஜெபிக்க வேண்டும். அப்பொழுது அவர் அவ்வாறே உங்களுக்குப் போதிப்பார். உங்கள்மேல் தன் கண்ணை வைத்து, தன்னை எப்படிப் பிரியப்படுத்துவது என்பதைக் குறித்த ஆலோசனைகளைச் சொல்லுவார்.
ஒரு சகோதரன், ஒரு முறை, தன்னுடைய சைக்கிளை ஓட்டிக்கொண்டு தனக்கு தெரிந்தவர்களுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டு அன்போடு உபசரித்தார்கள். பிறகு அவரோடு பேச ஆரம்பித்தார்கள். அவ்வாறு பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்திலேயே பல ஊழியக்காரர்களைக் குறித்தும், வேதத்திலுள்ள பரிசுத்தவான்களைக் குறித்தும் அவர்கள் குறை சொல்லி முறுமுறுக்கத் துவங்கினர்.
அப்பொழுது அவர் உள்ளத்தின் ஆழத்திலே “இனிமேலும் நீ இந்த இடத்தில் இருக்கவேண்டாம், எழுந்துபோ” என்று கர்த்தரால் உணர்த்தப்பட்டார். ஆனாலும்கூட அவரோ, திடீரென்று எழுந்துபோனால் அவர்கள் ஏதாகிலும் நினைப்பார்களோ என்ற எண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியேறுவதில் தாமதம்பண்ணினார். சில நிமிட நேரங்கள் கழித்து வெளியே வந்தார்.
ஆனால், அவர் வெளியே வரும்போது அவருடைய சைக்கிளின் டைனமோவை யாரோ உடைத்து திருடிவிட்டதைக் கண்டார். ‘ஆண்டவரே, இது ஏன் எனக்கு நேரிட்டது?’ என்று கேட்டார். அப்போது கர்த்தர் அவர் உள்ளத்தில், “நான் உன்னை எழுந்துபோ என்று உணர்த்தின உடனேயே என்னைப் பிரியப்படுத்தி வெளியே வந்திருப்பாய் என்றால் இவ்வாறு நடந்திருக்காது. இன்னும் அதிகமாக நீ தாமதித்திருந்தால் முழு சைக்கிளும் திருடு போயிருந்திருக்கும்” என்று உணர்த்தினார்.
கர்த்தர் அவருக்குப் போதித்த அந்த ஆவிக்குரிய பாடத்தை அவர் ஒருநாளும் மறக்காமல் இருந்துவந்தார். அவருக்குப் பிரியமில்லாத இடத்தில் இருந்துகொண்டு அவரைத் துக்கப்படுத்தும் தவறினை அதன்பின் அவர் செய்யவில்லை.
இது ஒரு சிறிய நிகழ்வாக இருந்தாலும்கூட இதன் மூலமாய் கர்த்தர் பெரிய ஆவிக்குரிய பாடத்தை அவருக்குப் போதித்தார். ஆகவேதான் தாவீது இராஜா “தேவனே உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்” என்று கர்த்தரிடத்தில் மனதுருகி ஜெபித்தார். கர்த்தரை மட்டுமே பிரியப்படுத்த வேண்டுமென்ற நோக்கமுடையவர்கள் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து, அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய சித்தத்தின்படி அவருடைய வழிகளில் நடக்க முற்படுவார்கள்.
தேவபிள்ளைகளே, எதைச் செய்தாலும் இது கர்த்தருக்குப் பிரியமானதாய் இருக்குமா, இந்த செயலினால் கர்த்தர் மனம் மகிழுவாரா, நான் செல்லுகிற இடங்களுக்கு கர்த்தர் சந்தோஷத்தோடு என்னுடன் வருவாரா, நான் பேசுகிற சம்பாஷணைகள் அவருக்குப் பிரியமானதாய் இருக்குமா, என்பதையெல்லாம் சீர்தூக்கிப் பாருங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிமிட நேரமாவது, கர்த்தருக்கு நேராய் உங்கள் கண்களை ஏறெடுத்து, “ஆண்டவரே உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்” என்று ஜெபித்துக்கேளுங்கள்.
நினைவிற்கு:- “அவன் தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்” (யோபு 33:26).