நவம்பர் 01 – கர்த்தரின் வார்த்தைகள்!
“மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (உபா. 8:3).
புதிதாக இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களானாலும் சரி, முதிர்ந்த அனுபவம் உள்ள கிறிஸ்தவர்களானாலும் சரி, கிறிஸ்தவ மார்க்கத்திலே கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கவேண்டியது அவசியம். அப்பொழுதுதான் கர்த்தருடைய சித்தத்தின் மையத்திலே இருக்க முடியும். வாழ்க்கையும் வளமானதாகவும், செழிப்பானதாகவும் இருக்கும்.
அநேகர் கர்த்தருடைய சத்தத்தைக் கவனமாய்க் கேட்கத் தவறுவதால், தேவசித்தத்தை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையைக்குறித்து தேவன் வைத்திருக்கிற மேன்மைகளை அறிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். தங்கள் மனதும், மாம்சமும் விரும்புவதைச் செய்கிறார்கள். ஆனால், கர்த்தருடைய வழிகளோ, மனிதனுடைய வழிகளைப்பார்க்கிலும் ஆயிரம் மடங்கு மேன்மையுள்ளதாய் இருக்கின்றன.
நீங்கள் கர்த்தருடைய வழியிலே நடக்கிறீர்களா? அவருடைய சத்தத்திற்குச் செவி கொடுக்கிறீர்களா? நீங்கள் ஊக்கமாய் ஜெபித்து முடித்த பின்பு, கர்த்தர் பேசுவதற்கு இடம் கொடுக்கிறீர்களா? கர்த்தருடைய பூரணமான சித்தத்தை உங்கள் வாழ்க்கையிலே செய்கிறீர்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
அநேகருடைய ஜெபவாழ்க்கை ஒருவழிப் பாதையாகவே இருக்கிறது. (one way traffic). கர்த்தர் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார், உண்மைதான். அதைவிட அதிகமாக உங்களோடு சம்பாஷிக்க விரும்புகிறார். தம்முடைய வழிகளை உங்களுக்குப் போதிக்க விரும்புகிறார். “நான் உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8) என்று வாக்களித்திருக்கிறார்.
கர்த்தர் எவ்வளவோ இரகசியங்களை அவர்களிடம் பேச வேண்டுமென்று விரும்பினாலும், அவர்களுடைய வாழ்க்கையைக்குறித்து மேன்மையான திட்டங்களை விவரிக்க விரும்பினாலும், அவர்கள் கர்த்தருக்கு நேரம் கொடுப்பதில்லை. அவர் பேசுவதைக் கேட்பதுமில்லை.
நீங்கள் பெற்றிருக்கிற அபிஷேகத்தை அனல்மூட்டி எழுப்பிவிடுவதுடன், ஆவியானவரோடு ஆழமான இனிய உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அவருடைய மெல்லிய சத்தத்தைக் கேட்க தாகமும், ஏக்கமும் கொண்டிருங்கள். எப்பொழுதும் ஆவியானவரால் நடத்தப்படுகிற மேன்மையான நிலைமைக்கு வாருங்கள்.
வேலைக்காரர்கள் எஜமானனுடைய கட்டளைகளை எதிர்நோக்கி இருக்கவேண்டும். பிள்ளைகள் தகப்பனுடைய ஆலோசனைகளுக்கு செவிகொடுக்கவேண்டும். நண்பர்கள் சிநேகிதனுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். மணவாட்டி மணவாளனுடைய குரலுக்கு ஆவலோடு காத்திருக்கவேண்டும். கர்த்தர் உங்களுக்கு எஜமானனாகவும், அன்பின் பிதாவாகவும், உள்ளன்போடு நேசிக்கும் நண்பராகவும், அதே நேரத்தில் ஆத்துமநேசராகவும் இருக்கிறார். தேனிலும் மதுரமான அவருடைய வார்த்தைக்கு நீங்கள் செவிகொடுக்கவேண்டியது அவசியம் அல்லவா?
தேவபிள்ளைகளே, நீங்கள் அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்போது, அவருடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பீர்கள்.
நினைவிற்கு:- “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவா. 10:27).