ஜூலை 13 – மகனே, திடன்கொள்!
“மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” (மத். 9:2).
உலகம் பலவிதங்களில் உங்களை சோர்ந்துபோகப்பண்ண முயற்சிக்கிறது. சாத்தான் சோர்புகளையும் துயரங்களையும் கொண்டுவருகிறான். பொல்லாத ஜனங்கள் கடுமையான வார்த்தைகளினால் மனதை வேதனைப்படுத்திவிடுகிறார்கள். ஆனால் அருமை ஆண்டவரோ, எப்பொழுதும் உங்களை ஆற்றித் தேற்றி திடப்படுத்துகிறவராகவே இருக்கிறார்.
“மகனே, திடன்கொள். உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்று ஆண்டவர் அந்த திமிர்வாதக்காரனைப் பார்த்து சொல்லுகிறதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். ஒருவேளை அந்த திமிர்வாதக்காரனை கிறிஸ்துவின் முன்பாக இறக்கியபோது மற்றவர்களெல்லாம், ‘இவன் முற்பிதாக்களின் சாபங்களை அனுபவிக்கிறான்; நன்றாய் அனுபவிக்கட்டும்’ என்று கருத்து தெரிவித்திருக்கலாம். ஆனால், அவனோ வியாதியினால் முற்றிலும் தொய்ந்துபோயிருந்தான்.
அவன் வாழ்நாளெல்லாம் மற்றவர்களைச் சார்ந்தே ஜீவிக்கவேண்டும். அவனால் அவனுக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கும் கஷ்டம். கர்த்தர் அன்போடு அவனைப் பார்த்து முதலாவதாக, மகனே என்று அழைக்கிறார். எத்தனை இனிமையான வார்த்தை அந்த வார்த்தை! நீ என்னுடைய மகன். நான் உன்னை என்னுடைய சாயலின்படியே, என்னுடைய ரூபத்தின்படியே உண்டாக்கினேன். நீ என்னுடைய பிள்ளை. மகனே, என்று அழைத்த அந்த வார்த்தை அந்த சகோதரனை எவ்வளவாய் திடப்படுத்தியிருக்கும்!
தேவபிள்ளைகளே, நீங்கள் ஒருவேளை மனம்சோர்ந்துபோய் இருக்கலாம். ஆனால் கர்த்தரோ உங்களை அன்போடு “மகனே, மகளே” என்று அழைக்கிறார். அந்த தெய்வீகக் குரலை தியானித்துப்பாருங்கள். அந்த பாசமுள்ள குரலை உங்களுடைய காதுகள் கேட்கட்டும்.
இரண்டாவதாக, ‘நீ திடன்கொள்’ என்று சொல்லுகிறார். ஆம், நீங்கள் திடன்கொள்ளும்போது, உங்களுக்குள் தெய்வீக பெலன் வரும். நீங்கள் திடன்கொள்ளும்போது, பரலோக வல்லமை உங்களை நிரப்பும். திடன்கொள்ளும்போது விசுவாச வீரர்களாய் மாறிவிடுவீர்கள்.
மூன்றாவதாக, “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்று கர்த்தர் சொல்லுகிறார். வியாதியின் காரணத்தைப் புரிந்துகொண்ட கர்த்தர், அந்த வியாதியின் மூலபாவத்தை நீக்கிப்போடச் சித்தமானார். பாவத்தை நீக்கிப்போடும்போது மீண்டும் அந்த திமிர்வாதம் வரப்போவதில்லை. நோய்கள் தாக்குவதில்லை.
ஆம், வெறுமனே மேலோட்டமாய் குணமாக்கி அனுப்பிவிட கர்த்தர் விரும்பவில்லை. அந்த திமிர்வாத நோயின் வேரான பாவத்தை முற்றிலும் அவனுடைய வாழ்க்கையிலிருந்து பிடுங்கி எறிந்துவிட கர்த்தர் தீர்மானித்தார். இரண்டு அற்புதங்களை அவன் பெற்றுக்கொண்டான். ஒன்று, அவனுடைய சரீரத்திலே சுகம். இரண்டாவதாய் ஆவிக்குரிய சுகம். சரீரத்திலுள்ள திமிர்வாதனென்னும் நோயும் நீங்கினது; ஆத்துமாவிலே பாவத்தினால் வந்த நோயும் நீங்கினது. அல்லேலூயா!
நினைவிற்கு:- “பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்” (மத். 9:6,7).