ஜூலை 12 – கூப்பிட்டுச் சொல்!
“பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது” (ஏசா. 40:6).
வானத்திலிருந்து ஏசாயாவுக்கு ஒரு சத்தம் உண்டானது. ஜனங்களுடைய ஆவிக்குரிய நிலைமையும், நியாயத்தீர்ப்புக்கு தப்பும்படியான வழிமுறைகளையும் அந்த சத்தம் தெரிவித்தது. வானத்திலிருந்து வந்த சத்தம், “கூப்பிட்டுச் சொல்” என்று உரைத்தது. உடனே, ஏசாயா தீர்க்கதரிசி, “என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன்?” என்று கேட்டார். அப்பொழுது கர்த்தர் ஒரு முக்கியமான சத்தியத்தைத் தெரிவிக்கச் சித்தமானார். “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது” என்பதே அந்த சத்தியம்.
நோவாவின் காலத்தில் நடந்தது எதுவோ, அதுவே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். ஜனங்கள் புல்லைப்போல இருந்தார்கள். அவர்களுடைய மேன்மை பூவைப்போல இருந்தது. அவர்களுடைய அக்கிரமம் மிகுதியானபோது, ஜலப்பிரளயம் அவ்வளவுபேரையும் அழித்துப்போட்டது.
மாம்சமான மனிதன், தன்னை ஒரு பலசாலியாகக் காட்டிக்கொண்டாலும் கர்த்தரோ அவனைப் புல்லைப்போலவே காண்கிறார். “சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்” (யாக். 1:11).
வானத்திலே உரைக்கப்பட்டிருந்த அந்த சத்தத்தையே அப். யாக்கோபும், அப். பேதுருவும் கேட்டார்கள். “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” (1 பேது. 1:24,25).
கர்த்தர், ஒரு குறிப்பிட்ட காலம்வரைக்கும், ஒருவனை கவனித்துக்கொண்டே வருகிறார். ஒருவரும் கெட்டுப்போவது அவருக்குச் சித்தமில்லை. ஒவ்வொரு மனிதனும் மனந்திரும்பவேண்டுமென்று அவர் சிலுவையிலே மரணத்தை ருசிபார்த்தார். ஆனால், அவன் மனந்திரும்பி, கர்த்தர் எதிர்பார்க்கிற பரிசுத்தத்திற்குள் வராவிட்டால், அவனுடைய ஞானம், ஐசுவரியம், பெலன் என அனைத்துமே அவனுக்குக் கண்ணிகளாகக மாறிவிடும்.
முதலாவது, மனிதன் தன்னை ஒரு புல் என்பதை உணரவேண்டும். புல் என்பது ஒரு நிலையற்ற வாழ்க்கையை காண்பிக்கிறது. தாவீது பெரிய இராஜாவாயிருந்தாலும், தன்னைத் தாழ்த்தி, “நானோ ஒரு புழு, மனுஷனல்ல” (சங். 22:6) என்று சொன்னார். மனிதனுடைய நிலையற்ற வாழ்க்கையை அப். யாக்கோபு எழுதும்போது, “உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே” என்று குறிப்பிட்டார் (யாக். 4:14).
தேவபிள்ளைகளே, இந்த நிலையற்ற வாழ்க்கையில் கர்த்தரை உறுதியாய் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். அவர் ஒருவரே நித்தியமானவர். அவர் ஒருவரே நித்திய ஆசீர்வாதத்தைத் தர வல்லவர்.
நினைவிற்கு:- “என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம்” (யோபு 9:25).