Appam, Appam - Tamil

ஜூலை 09 – வேறொரு சத்தம்!

“பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள் (வெளி. 18:4).

“நீங்கள், மகா பாபிலோன் என்ற வேசியின் பாவங்களுக்கு உடன்படாதிருங்கள். உடன்பட்டீர்களானால், அவளுக்கு நேரிடும் வாதைகளிலும் அகப்படுவீர்கள்” என்று வானத்திலிருந்து தொனிக்கும் சத்தம் எச்சரிக்கிறது. இங்கே பாவ சோதனையைக் கொடுக்கக்கூடிய ஒரு ஸ்திரீயைக்குறித்துப் பார்க்கிறோம்.

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில், நான்கு ஸ்திரீகளைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறது. முதலாவது, யேசபேல். கர்த்தர் தியத்தீரா சபையை எச்சரிக்கும்போது, “தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்” (வெளி. 2:20) என்று எச்சரித்தார். தன்னை ஒரு தீர்க்கதரிசியைப்போல காண்பித்துக்கொண்டு, வேசித்தன ஆவியை பரப்பிவிடுபவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களுக்கு நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

இரண்டாவதாக, சகல வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாயாய் விளங்குகிற மகா பாபிலோன் (வெளி. 17:5). அந்த ஸ்திரீ, பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவின் சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதை அப். யோவான் கண்டார். வானத்திலிருந்து வருகிற சத்தம் அவளைக்குறித்து எச்சரிக்கத் தீர்மானித்தது. அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலிருக்கும்படி அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது. அவளுடைய அந்தரங்கங்களையும் தேவன் நினைவுகூர்ந்தார் (வெளி. 18:14,15).

இந்த கடைசி காலங்களில் சாத்தான் பயங்கரமான இச்சைகளின் ஆவிகளை கட்டவிழ்த்திருக்கிறான். கிறிஸ்தவ வழிபாடுகளுக்கான காணொளிப் பதிவுகளில்கூட திரைப்படங்களைப்போலவே வாலிபர்களையும், வாலிபப் பெண்களையும் நடனமாடவைத்து ஆராதிக்கிறார்கள். ஆராதனை என்ற பெயரில் போலியான பொழுதுபோக்கு இச்சைகளையே இவை பரப்புகிறதே தவிர, எந்த விதத்திலும் பரிசுத்தத்தை ஏற்படுத்துகிறதில்லை. ஆகவே இந்த பாபிலோனிய ஸ்திரீயைவிட்டு வெளியே வாருங்கள்.

மூன்றாவதாக, சூரியனை அணிந்திருந்த ஸ்திரீயை வெளி. 12-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அங்கே சூரியன் என்று காணப்படுகிறது நீதியின் சூரியனாகிய கர்த்தரைக்குறிக்கிறது (மல். 4:2). சூரியனை அணிந்திருக்கிறவர்களை வேதம் அழைக்கிறது. “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசா. 60:1). நான்காவதாக, ஒரு ஸ்திரீயை வெளிப்படுத்தின விசேஷத்தில் சந்திக்கிறோம். அவள்தான் ஆட்டுக்குட்டியானவருடைய மனைவி. அவள்தான் கற்புள்ள கன்னிகையாக விளங்குகிற கற்புள்ள சபை (வெளி. 19:7-9). தேவபிள்ளைகளே, கர்த்தரோடும், அவருடைய சபையோடும் இணைந்திருங்கள். அப்பொழுது அவருடைய வருகையில் நீங்கள் காணப்படுவது உறுதி.

நினைவிற்கு:- “நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டான்” (வெளி. 19:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.