Appam, Appam - Tamil

ஜூலை 06 – இடிமுழக்கமான சத்தம்!

“பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று (யோவா. 12:28,29).

தனது மரண வேளை நெருங்கி வருகிறது என்பதை இயேசு உணர்ந்து, “பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” என்றார். ஒவ்வொரு கிறிஸ்தவனின் மரணமும், தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தக்கூடியதாய் இருக்கவேண்டும். “ஒருவனுடைய ஜநநநாளைப் பார்க்கிலும் மரணநாளும் நல்லது” (பிர. 7:1). துவக்கத்தைப் பார்க்கிலும், முடிவு சம்பூரணமாக இருக்கவேண்டும். ஆரம்பம் அற்பமாயிருந்தாலும், முடிவோ மகிமையாய் காணப்படவேண்டும்.

சாபமும், இருளும், வியாதிகளும், துரோகங்களும், பிரச்சனைகளும் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்கிறோம். தேவனால் தள்ளப்பட்ட தேவதூதர்கள் இந்த உலகத்தில் விழுந்ததினால், பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் மாறிற்று. மனிதன் விழுந்துபோனபோது, அவன்மேல் வந்த சாபத்தின் நிமித்தம், பூமி முள்ளையும், குருக்கையும் முளைப்பித்தது.

இயேசு, தான் கடந்து செல்லவேண்டிய மரணம் மகா வேதனையுள்ளது என்பதை அறிந்திருந்தார். முள்முடி சூட்டப்பட்டு, நிர்வாணகோலமாக ஜனங்களுக்கு முன்பாக தொங்கவேண்டும் என்பதையும், நிந்தைக்கும் அவமானத்திற்கும் தன்னை ஒப்புக்கொடுக்கவேண்டும் என்பதையும் அறிந்திருந்தார். பொதுவாக, சிலுவையிலே அறையப்பட்டிருக்கிறவர்கள் எப்போதும் ஜனங்களை சபிப்பார்கள். கடவுளைத் தூஷிப்பார்கள். தாங்கமுடியாத வேதனையால் கதறுவார்கள். ஆனால், இயேசுவோ, அந்த வேளையை ஜெபவேளையாக்கி, தேவனை மகிமைப்படுத்தத் தீர்மானித்தார்.

“பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன். பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்” (யோவா. 17:4,5) என்பதே கெத்கெமனே தோட்டத்திலே அவருடைய ஜெபமாயிருந்தது.

ஏசாயா தீர்க்கதரிசி அந்தக் காட்சியை தன் தீர்க்கதரிசனக் கண்களால் கண்டு, “அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்” (ஏசா. 53:12) என்றார். அவருடைய மரணத்திலும் பிதாவை மகிமைப்படுத்தினபடியால், அந்த நேரத்திலும் ஆத்தும ஆதாயம் செய்ய அவரால் முடிந்தது. அவரோடு சிலுவையிலே தொங்கின கள்ளன் இரட்சிக்கப்படுவதற்கு ஏதுவாயிற்று.

இன்றைக்கு அநேகர் மரணத்தைக்குறித்துப் பயப்படுகிறார்கள். அவர்களில் பலர் கல்லறைத்தோட்டங்களுக்குக்கூட போவதில்லை. தெருவிலே பிரேத ஊர்வலம் வருகிறது என்றால், வீட்டு அறைக்குள்போய் ஒளிந்துகொள்வார்கள். வேதம் சொல்லுகிறது, “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபி. 9:27). தேவபிள்ளைகளே, உங்களுடைய முடிவு சம்பூரணமாகவும், மகிமையுள்ளதாகவும் இருக்கவேண்டும்.

நினைவிற்கு:- “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங். 116:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.