ஜூலை 04 – மேகத்திலிருந்து ஒரு சத்தம்!
“இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று” (லூக். 9:35).
ஒருமுறை இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களான பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரை அழைத்துக்கொண்டு ஜெபம்பண்ணுவதற்கு ஒரு மலையின்மேல் ஏறி, அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவருடைய முகம் சூரியனைப்போல பிரகாசித்தது. அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. அன்றியும் மோசே, எலியா ஆகிய இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணினார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி, “ஐயரே, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம்” என்றார் (லூக். 9:33).
அப்பொழுது, வானத்திலிருந்து சத்தம் தொனித்தது. “இவர் என்னுடைய நேசகுமாரன், …. இவருக்குச் செவிகொடுங்கள்” என்று உரைத்தது (மத். 17:5). அதுபோலவே, இயேசு ஞானஸ்நானம் பெறும்போது “அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது” (மத். 3:17).
இங்கே மோசே நியாயப்பிரமாணத்திற்கு அடையாளமானவர். ஆகவே இஸ்ரவேலர் மோசேயின் சத்தத்திற்குச் செவிகொடுத்தார்கள். எலியா தீர்க்கதரிசனத்துக்கு அடையாளமானவர். ஆகவே ஜனங்கள் அவருடைய தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு செவிகொடுத்தார்கள். இரண்டுபேரும் பழைய ஏற்பாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால், இப்பொழுது புதிய ஏற்பாட்டு கிருபையின் காலம் ஆரம்பமாகி விட்டது. இப்பொழுது பரலோகம் கிறிஸ்துவைக் கனப்படுத்தி, “அவருக்குச் செவிகொடுங்கள்” என்று உரைத்தது.
மோசேயும், எலியாவும் என்னதான் மறுரூப மலைக்கு வந்து பேசினாலும், அவர்கள் உங்களுக்காக ஜீவனைக் கொடுக்கவில்லை. கிறிஸ்துதான் ஜீவனைக் கொடுத்திருக்கிறார். கிறிஸ்து வரப்போகிற நியாயாதிபதி. ஆகவே அவருக்கே செவிகொடுங்கள். பூமிக்குரிய வாழ்க்கையிலே, ஒருவன் பல சத்தங்களுக்கு செவிகொடுக்கவேண்டியதாயிருந்தாலும், பிரதானமாக கர்த்தருடைய சத்தத்திற்கே செவிகொடுக்கவேண்டும். கர்த்தருடைய சத்தத்திற்கு விரோதமாயிருக்கிற வேறே எந்த சத்தத்திற்கும் செவிகொடுக்கவேண்டியதில்லை.
கர்த்தருக்காக வைராக்கியமாய் இருந்த ஒரு பெண்ணை, அவளது பெற்றோர் குடிப்பழக்கமுள்ள ஒரு இராணுவ தளபதிக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். அவன் மற்ற தளபதிகளோடு இரவிலே குடித்து நடனம் ஆடும் பழக்கமுள்ளவன். அவன் தன் மனைவியிடம் மற்றவர்களுக்கு மதுபானம் ஊற்றிக்கொடுத்து, அவர்களோடு நடனம் ஆடும்படி சொன்னான். அவள் மறுத்துவிட, அவனோ கணவனுக்குக் கீழ்ப்படி என்னும் வேதவாக்கை நினைவுபடுத்தினான்.
அவள் அதற்கு, “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்” (எபே. 5:22) என்றுதான் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘கர்த்தருக்கு விரோதமாக நடந்து அவரைத் துக்கப்படுத்திய உங்களுக்குக் கீழ்ப்படிய முடியாது’ என்று உறுதியாய் சொல்லிவிட்டாள்.
தேவபிள்ளைகளே, பக்தி வைராக்கியத்தோடு வானத்திலிருந்து வருகிற சத்தத்திற்குக் கீழ்ப்படியுங்கள். நித்திய நித்திய காலமாய் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
நினைவிற்கு:- “அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை” (மத். 17:8).