ஜூன் 24 – அடைக்கலமானவர்!
“அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்” (உபா. 33:27).
கர்த்தர் நமக்கு அடைக்கலமானவர். அந்த அடைக்கலம் சாதாரணமான அடைக்கலமல்ல. மிகவும் மேன்மையான அடைக்கலம். அநாதி தேவனே உனக்கு அடைக்கலம் என்று மோசே பக்தன் கூறுகிறதைப் பாருங்கள். கர்த்தருடைய அடைக்கலத்திலே இருக்கிற மனிதன் பாக்கியவான்.
இலங்கை தேசத்திலிருந்து வந்த ஒரு ஊழியரை நான் சந்தித்தேன். அவர் மிகுந்த கண்ணீரோடு, “பலமுறை இலங்கை ராணுவத்தினர் என்னைத் துப்பாக்கியால் சுட்டார்கள். ஆனால் அந்த துப்பாக்கியிலிருந்து குண்டுகள் புறப்படவில்லை. ஹெலிகாப்டர்மூலமாக என்னுடைய ஆலயத்தின்மேல் பெரிய குண்டுகளை வீசினார்கள். குண்டுகள் கீழே விழுந்தன. ஆனால் அவை வெடிக்கவில்லை. அநாதி தேவனே எங்களுக்கு அடைக்கலமாயிருந்தார்’ என்று சொன்னார்.
நாம் வாழுகிற உலகம் ஒரு பயங்கரமான உலகம். எந்த நேரம் எந்த ஆபத்து வரும் என்பதைக் கணிக்கமுடியாது. பில்லி சூனியங்களும், செய்வினைகளும், மந்திரங்களும், தொற்றுநோய்களும், விபத்துக்களும் சுற்றிலும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், நாம் அவைகளுக்கு பயப்படவேண்டியதில்லை. அநாதி தேவனே நமக்கு அடைக்கலமாக இருக்கிறார்.
தாவீதைப் பாருங்கள்! அவருக்கு எத்தனை விரோதிகள் இருந்தார்கள்! ஆடு மாடுகளை மேய்க்கும்போது சிங்கங்களும், கரடிகளும், ஓநாய்களும் அவருக்கு எதிர்கொண்டு வந்தன. தாவீது, கர்த்தருடைய அடைக்கலத்தில் இருந்ததினால் அவைகளால் அவரைச் சேதப்படுத்தவில்லை. மாறாக, தாவீதுதான் அவைகளை எதிர்கொண்டுபோய் அடித்துக் கொன்றுபோட்டார்.
அடைக்கலம் என்ற வார்த்தைக்கு பாதுகாப்பு என்று பொருள். கர்த்தர் தாவீதுக்கு உயர்ந்த அடைக்கலமாக இருந்து சவுலின் கையிலிருந்து மாத்திரமல்லாமல், பெலிஸ்தியர், மீதியானியர்போன்ற பலவகையான பகைவர்களிடமிருந்தும் அவரைப் பாதுகாத்து, தம் அடைக்கலத்திற்குள் வைத்துக்கொண்டார்.
கிறிஸ்துவின் அடைக்கலத்தின் மேன்மையை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமா? கோழியின் செட்டைகளின் கீழிருக்கிற குஞ்சுகளைப் பாருங்கள். அவைகளுக்குத்தான் எத்தனை நிம்மதி! எத்தனை ஆறுதல்!
கோழியின் செட்டைகளுக்குள்ளிருக்கிற குஞ்சுகள் உள்ளேயிருந்து தலையைத் தூக்கி குறும்பாய்ப் பார்க்கும். காக்கைகளைக்குறித்தோ, வல்லூறுகளைக்குறித்தோ, பருந்துகளைக்குறித்தோ அவை கவலைப்படுவதில்லை. எந்த ஆபத்து வந்தாலும் தங்களுடைய தாய் தங்களைத் தப்புவிக்கும் என்று அவை அறிந்திருக்கின்றன.
தேவபிள்ளைகளே, “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்” (சங். 91:1-3).
நினைவிற்கு:- “ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” (சங். 46:6,7).