ஜூன் 20 – சிறைப்படுத்துங்கள்!
“எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்” (2 கொரி. 10:5).
நம்முடைய மனது ஓர் போர்க்களம் ஆகும். அங்கே பாவமான எண்ணங்களுக்கும், பரிசுத்தமான வாழ்வுக்கும் இடையே அடிக்கடி போர் நடக்கிறது. மாம்சீக எண்ணங்களும், ஆவிக்குரிய எண்ணங்களும் ஒன்றோடொன்று யுத்தம் செய்கின்றன. நாம் மாம்சீக எண்ணங்களுக்கு இடம் கொடுப்போமானால், பாவம் நம்மை மேற்கொண்டுவிடும். ஆகவே பாவம் செய்யத்தூண்டும் எண்ணங்கள் மற்றும் சோதனைகளைக்குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையாயிருக்கவேண்டும். கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய எந்த எண்ணத்தையும் சிறைப்படுத்துகிறவர்களாய் இருக்கவேண்டும்.
ஒரு முறை ஒரு சகோதரர் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, நல்வழிக்குத் திரும்பி பரிசுத்த வாழ்க்கையிலே முன்னேற ஆரம்பித்தார். ஆனால், ஒருநாள் மதியம் தன் வீட்டிலே தனிமையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் வந்த ஒரு விளம்பரக் காட்சி அவருடைய இருதயத்தைப் பாதித்தது. ஒரு நங்கை மதுபானத்தைக் கோப்பையில் பொங்கி வழியும்படி ஊற்றி, தன் இனிய குரலிலே பாடிக்கொண்டே பலரையும் குடிக்கச்செய்தாள்.
அவள் பலருக்கு மது ஊற்றிக் கொடுக்கிறதையும் அவர்கள் குடித்துவிட்டு கும்மாளம்போடுகிறதையும் பார்த்தவுடனே இவருடைய கற்பனா சக்தி மிக வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது. தான் வெறுத்து ஒதுக்கிய குடிப்பழக்கத்தை நினைவுகூர வேண்டியதாயிற்று. மீண்டும் குடித்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்ற எண்ணம் வந்தது. பாவம் அவரை மீண்டும் தொற்றிக்கொண்டது.
அதே நேரம் மறு பக்கமோ, “நான் தேவனுடைய பிள்ளை. இதைப் பருகக்கூடாது” என்ற சிந்தனையும் வந்தது. இரண்டுக்கும் இடையில் பெரிய போராட்டம். மனதிலே பெரிய யுத்தம். அவர் கண்களை மூடும்பொழுதெல்லாம் அந்த மதுபான பாட்டிலும் மங்கையும்தான் நினைவுத்திரையில் ஓடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவுக்கெவ்வளவு அதைக்குறித்து சிந்தித்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு மதுபானத்தின்மேலான ஆவல் அதிகமானது. முடிவில் மதுக் கடைக்குப் போய் மனம்போல குடித்துவிட்டார். அதன் பின்பு அவரால் அந்தப் பழக்கத்தை மேற்கொள்ளவே முடியவில்லை.
நாம் நம்முடைய சிந்தனைகளைக்குறித்தும், கற்பனைகளைக்குறித்தும் எச்சரிக்கை உள்ளவர்களாய் இருக்கவேண்டும். மனிதனுடைய கற்பனை சக்தியிலே பெரிய வல்லமை உண்டு. ஒருவன் சிற்றின்பங்களை சிந்திப்பானானால் அவனுடைய எண்ணங்களும், நினைவுகளும், அவனுடைய உள்ளான மனுஷனைக் கறைப்படுத்தி முடிவில் அவனை பாவ வழிக்கு இழுத்துச்சென்றுவிடும். ஆனால் எந்த ஒரு மனிதன் தன்னுடைய சிந்தனையை, ஜெபத்திற்கும், பரிசுத்தத்திற்கும், வேத வசனங்களுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் ஒப்புக்கொடுக்கிறானோ, அவன் ஜெயத்தின் பாதையிலே நடக்கிறான்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய எண்ணங்களிலே பாவம் வரும்பொழுதே அதை அப்புறப்படுத்தி இயேசுவினுடைய இரத்தத்தினாலே எதிர்த்து நில்லுங்கள். இச்சைகளுக்கு இடம் கொடுத்து அது பாவத்தை கர்ப்பம் தரிக்க இடம் கொடாதீர்கள். பரிசுத்தமான சிந்தனைகளுக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள்.
நினைவிற்கு:- “அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது” (ரோம. 1:21).