செப்டம்பர் 09 – வசனம் உயிர்ப்பிக்கும்!
“உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்” (சங். 119:25).
கர்த்தருடைய வார்த்தைக்கு உயிர்ப்பிக்கும் வல்லமை உண்டு. ஆகவேதான் இயேசு சொன்னார், “நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” (யோவா. 6:63). எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் வேதத்தை வாசிக்கிறீர்களோ, எவ்வளவுக்கெவ்வளவு வாக்குத்தத்தங்களை விசுவாச அறிக்கையாய் சொல்லுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உயிர்ப்பிக்கிற வல்லமை உங்கள்மேல் பலமாய் இறங்கி வரும்.
ஆபிரகாமுக்கு எழுபத்தைந்து வயதாகி, அவருடைய சரீரம் குழந்தை பெறமுடியாத அளவு செத்துப்போயிருந்தது. அவருடைய மனைவியாகிய சாராளுக்கும் ஸ்திரீகளின் வழிபாடு நின்றுபோய் கர்ப்பம் செத்துப்போயிருந்தது. குழந்தை பிறக்கவேண்டுமானால் அவர்களுக்குள் உயிர்ப்பிக்கிற தேவனுடைய வல்லமை இறங்கியாகவேண்டும். கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய்ப் பற்றிக்கொண்டதே ஆபிரகாம் செய்த காரியமாயிருந்தது.
வேதம் சொல்லுகிறது, “அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவராயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தார். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானார்” (ரோம. 4:19-21).
ஆபிரகாம் பெற்றுக்கொண்ட வாக்குத்தத்த வசனங்கள், அவருடைய விசுவாசத்தை பெலப்படுத்தியது. கர்த்தர்மேல் நம்பிக்கையைக் கொண்டுவந்தது. இதனால் திரளான ஜாதிகளுக்கு அவர் தகப்பனாய் இருக்கிறார். ஆபிரகாமின் சரீரத்தை உயிர்ப்பித்த கர்த்தர், உங்களுடைய சரீரத்தையும் உயிர்ப்பிப்பார். ஆகவே, தாவீது விசுவாசத்தோடு சொன்னார், “அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்” (சங்.71:20).
கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற வாக்குத்தத்தங்களை உறுதியாய்ப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். வானமும் பூமியும் ஒழிந்தாலும் அவருடைய வாக்குத்தத்தங்கள் ஒழிந்துபோவதில்லை. நீங்கள் பற்றிப்பிடித்திருக்கிற கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறபடியினால் நிச்சயமாகவே உங்களை அவை உயிர்ப்பிக்கும்.
“இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்” (சங். 119:40,50,93).
தேவபிள்ளைகளே, எந்த நிலைமையிலும் சோர்ந்துபோகாதிருங்கள். மனம்மடிந்துபோகாதிருங்கள். இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சோர்வின் வார்த்தைகளைப் பேசாதிருங்கள். உங்களை உயிர்ப்பிக்க, கர்த்தருடைய வசனம் காத்திருக்கிறது. நீங்கள் நிச்சயமாகவே உயிர்ப்பிக்கப்பட்டு ஆதிநிலைமைக்கு வருவீர்கள்.
நினைவிற்கு:- “என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும்; …. உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்” (சங். 119:153,154).