செப்டம்பர் 01 – தப்பிற்று!
“ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று” (சங். 73:2).
கர்த்தர் கிருபையாய் நம் எல்லோருக்கும் கால்களைக் கொடுத்திருக்கிறார். அதற்காக நாம் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். கால்கள் இல்லாத மனிதர் படும் வேதனைகளைப் பார்க்கும்போது, நம்மை அறியாமல் அவர்கள்மேல் பரிதாபம் ஏற்படுகிறது.
ஆனால் நமக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. நம்முடைய கால்களை மனமும், மாம்சமும் விரும்பின இடத்திற்கு நடக்கவிடாமல் பயபக்தியோடும், ஜாக்கிரதையோடும் காத்துக்கொள்ளவேண்டும். தேவாலயத்திற்கு நடந்து சென்று, கர்த்தரைத் துதிப்பதற்கு முக்கியத்துவம் தரவேண்டுமே தவிர, சினிமாவுக்கும், உலக உல்லாசங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிடக்கூடாது.
தள்ளாடுதல், சறுக்குதல் என்ற இரண்டு வார்த்தைகள் மேலே சொன்ன வசனத்தில் பயன்படுத்தப்படுகின்றன. சரீரத்தில் பெலன் இல்லை என்றால் கால்கள் தள்ளாடும். நிற்கிற இடம் வழுக்கக்கூடியதாகவும், பாசி பிடித்ததாகவும் இருக்குமென்றால் அந்த இடம் சறுக்கலாக இருக்கும். பாவம் நிறைந்த உலகத்தில் கால்கள் தள்ளாடாமல், சறுக்காமல் நடப்பதற்கு நமக்கு உன்னத பெலன் தேவை. உன்னத பெலனைப் பெற்றுக்கொள்ளும்போது நம்முடைய கால்கள் மான் கால்களைப் போலாகிவிடும்.
ஒருமுறை ஒரு இளம் வாலிபப் பெண், தன் பெற்றோர் சொன்னதைக் கேளாமல் ஒரு பாறையின்மேல் ஏறினாள். ஒருசில நிமிட நேரத்திற்குள் அந்த பாறையிலிருந்து சறுக்கிக் கீழே விழுந்தாள். அவளுக்கு பலத்த அடிபட்டு வலியினால் அலறினாள். தேவபிள்ளைகளே, எந்த இடத்தில் கால்கள் சறுக்கும் என்று, உங்கள் உள்ளம் உணர்த்துகிறதோ, உடனே அந்த இடத்தைவிட்டு ஓடிவிடுங்கள். யோசேப்பு அப்படித்தான் வஸ்திரம் போனாலும் பரவாயில்லை என்று போத்திபாரின் மனைவியிடமிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தார்.
ஆனால் ஏவாளைப் பாருங்கள். சர்வ சாதாரணமாக சர்ப்பத்தினிடத்தில் பேசிக்கொண்டே நிற்கிறாள். கர்த்தரை சந்தேகிக்கக்கூடிய வார்த்தைகளை அது பேசும்போதும், அவள் அதட்டிக் கேட்கவில்லை. தன் கணவனிடமோ, கர்த்தரிடமோ ஆலோசனை கேட்கவேண்டுமென்று விரும்பவில்லை. அவளாக முடிவெடுத்து விலக்கப்பட்ட கனியைப் புசித்தாள். தானும் கெட்டு, தன் கணவனையும் கெட்டுப்போகச்செய்தாள்.
சங்கீதக்காரர் சொல்லுகிறார், “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தினார்” (சங். 40:2). கர்த்தர் உங்களைத் தூக்கி எடுத்திருக்கிறார். கல்வாரியின் இரத்தத்தினாலே கழுவிச் சுத்திகரித்திருக்கிறார். பாவமன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும் தந்திருக்கிறார். இனிமேலும் உங்கள் கால் சறுக்கும் இடத்தில் நீங்கள் நிற்கவேகூடாது.
“என் வழிகளைக் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்” (சங். 119:59) என்று தாவீது சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, உங்கள் கால்களை சாட்சிகளுக்கு நேராகத் திருப்புங்கள்.
நினைவிற்கு:- “உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” (சங். 121:3,4).