ஆகஸ்ட் 01 – பர்திமேயு!
“ …. பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்” (மாற். 10:46).
ஒருமுறை இயேசுவும், அவருடைய சீஷர்களும் எரிகோவில் ஊழியம் செய்துவிட்டு திரும்பும்போது, வழியருகே பர்திமேயு என்கிற ஒரு குருடன் உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
அவனுடைய காதுகளிலே திடீரென்று ஒரு பெரிய பவனி போவதின் சத்தம் தொனித்தது. நசரேயனாகிய இயேசு தன் சீஷர்களோடும், ஜனங்களோடும் சென்றுகொண்டிருக்கிறார் என்பதை அவன் அறிந்தான். அந்த சந்தர்ப்பத்தை அவன் நழுவவிடவில்லை.
ஆகவே அவன், “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டான். அவன் தனது நிர்ப்பந்தமான நிலைமையைவிட்டு வெளியே வந்துவிடவேண்டும், இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துவிடவேண்டுமென்று கூப்பிட்டாலும், அந்த சத்தத்தால் எரிச்சலடைந்த சிலர், பேசாதிருக்கும்படி அவனை அதட்டினார்கள்.
ஆனால் அவனோ, “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்” என்று முன்னிலும் அதிக சத்தமாகக் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். ஆகவே ஒருசிலர் அவனிடம் ஓடி வந்து, பர்திமேயுவை அழைத்து, ‘திடன்கொள், எழுந்திரு, இயேசு உன்னை அழைக்கிறார்’ என்றார்கள். உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். இயேசு அவனை நோக்கி, ‘நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று இருக்கிறாய்?’ என்றார்.
அதற்கு அந்தக் குருடன், ‘ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும்’ என்றான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம் உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, இயேசுவுக்குப் பின்சென்றான் (மாற். 10:46-52).
இயேசுகிறிஸ்து அற்புதமானவர், அவர் போகிற இடங்களிலெல்லாம் அற்புதங்கள் நடைபெற்றபடியினால் ஜனங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் அவரிடத்திற்கு வந்தார்கள். “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி. 13:8). “நான் கர்த்தர், நான் மாறாதவர்” (மல். 3:6) என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகவே, இன்றைக்கு அவர் உங்களுக்கும் ஒரு அற்புதம் செய்வார்.
இயேசு செய்த எல்லா அற்புதங்களுக்கும் பின்பாக அவருடைய அன்பு, தயவு, காருண்யம், இரக்கம் இருப்பதைக் காணலாம். அவர் ஒருபோதும் நம்முடைய தகுதியைப் பார்த்து, நமக்கு அற்புதங்களைச் செய்வதில்லை. அவருடைய மனதுருக்கத்தின் ஐசுவரியமே அற்புதத்தைக் கொண்டுவருகிறது.
ஆனாலும்கூட, நாம் அவரை நோக்கிப்பார்க்கவேண்டும், விசுவாசிக்கவேண்டும், அவரை நோக்கிக்கூப்பிடவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். உங்களுடைய விசுவாசமும், கர்த்தருடைய மனதுருக்கமும் இணையும்போது, நிச்சயமாகவே அற்புதம் நடக்கும்.
இயேசு இந்த பூமியிலிருந்த நாட்களில் அவருடைய வல்லமையால் நிறைய அற்புதங்கள் செய்திருந்தாலும், “உன்னுடைய விசுவாசமே உன்னை இரட்சித்தது” என்று பல இடங்களில் சொல்லுகிறதைக் காணலாம்.
தேவபிள்ளைகளே, விசுவாசம் அற்புதங்களைக் கொண்டுவருகிறது. நீங்கள் கர்த்தர்மேல் விசுவாசம் வைத்து அவரைச் சார்ந்துகொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார், அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்” (சங். 146:8,9).