Appam, Appam - Tamil

அக்டோபர் 26 – சீயோன் பர்வதம்!

“பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்” (வெளி. 14:1).

இந்தியாவுக்கு புதுடெல்லி, அமெரிக்காவுக்கு வாஷிங்டன், இலங்கைக்கு கொழும்பு, பாகிஸ்தானுக்கு கராச்சி என ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு தலைநகரம் உண்டு. அந்தத் தலைநகரிலே தேசத்தை ஆளக்கூடிய பாராளுமன்றம் உண்டு. அங்கிருந்துதான் சட்டங்களை இயற்றுகிறார்கள்.

பரலோகத்திலே புதிய வானம், புதிய பூமி, புதிய எருசலேம், கண்ணாடிக் கடல் என்றும், பிதாவின் வாசஸ்தலங்கள் என்றும் பல்வேறு இடங்கள் இருந்தாலும், தலைநகரம் சீயோன் பர்வதத்தில்தான் இருக்கிறது. அங்கேதான் பிதாவாகிய தேவன் வாசம்பண்ணுகிறார். அவருடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் இயேசுகிறிஸ்து அமர்ந்திருக்கிறார்.

அங்கே இருந்து அண்டசராசரங்களையும் ஆளுகை செய்கிறார். அவரை நாம், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அன்போடு அழைத்து, அவரை நோக்கி ஜெபிக்கிறோம். பரலோகத்திலுள்ள எல்லா இடங்களிலும் சீயோன் மகா மேன்மையான, மகிமையான இடமாகும்.

“ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்” (ஏசா. 28:16). கிறிஸ்துவாகிய மூலைக்கல்லின்மேல் அவ்வளவு பெரிய மாளிகையும், வாசஸ்தலங்களும் கட்டி எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நாம் அங்கே கிறிஸ்துவோடுகூட, யுகம் யுகமாக வாழ்ந்து சுகித்திருப்போம்.

அந்த நம்பிக்கை தீர்க்கதரிசியாகிய ஏசாயாவுக்கு இருந்தது. “இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்” (ஏசா. 8:18).

மார்த்தாள், மரியாள் வீட்டிலே அவருக்கு ஒருவேளை விருந்து செய்தார்கள். கொஞ்ச நேரம் அவர்களோடு இருந்தார். சகேயு வீட்டிலே ஒரு நாள் தங்கினார். சிலுவையில் அறையப்பட்ட கள்ளனோடு பரதீசில் ஒருநாள் இருந்தார். ஆனால் நம்மோடுகூட என்றென்றைக்கும் நித்தியநித்தியமாக கிறிஸ்து அன்போடு தங்கியிருப்பார். நாமும் அவரோடு வாசம்பண்ணுவோம்.

ஆகவே சங்கீதக்காரர், “நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங். 23:6) என்று மகிழ்ச்சியோடு சொன்னார். அந்த சீயோன் பர்வதத்தைச் சுட்டிக்காட்டி அப். பவுலும் “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது” (பிலி. 3:20) என்று எழுதினார்.

சீயோன் பர்வதத்திலே இலட்சக்கணக்கான பரிசுத்தவான்கள் வந்து கிறிஸ்துவோடுகூட மகிழ்ச்சியாய் நிற்பார்கள். நீங்களும் ஆட்டுக்குட்டியானவரோடு, ஆயிரம் பதினாயிரம் தேவதூதரோடு அந்த ஒளிமயமான தேசத்திலே நிற்கவேண்டும். என்றென்றும் அந்தப் பரிசுத்த பர்வதத்திலே வாசம்பண்ணவேண்டும்.

நினைவிற்கு:- “கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?” (சங். 15:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.