அக்டோபர் 25 – விலையேறப்பெற்றவை!
“இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்” (1 பேது. 2:6).
மனுஷனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவை பல உண்டு. ஆனால் காலப்போக்கில் அவை தங்கள் மதிப்பை இழந்துபோகின்றன; கெட்டழிந்து போகின்றன! ஒரு காலத்தில் விலையேறப் பெற்றவர்களாய் காணப்பட்டவர்கள் இன்று கந்தையும், குப்பையுமாகக் காணப்படுகின்றனர். கர்த்தருடைய பார்வையில் விலையேறப்பெற்றவை என்னென்ன?
- உலகத்தின் பார்வையில் உயர்ந்த வஸ்திரங்களும், பொன்னாபரணங்களும் விலையேறப்பெற்றவை. ஆனால் கர்த்தருடைய பார்வையில், “சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே …. விலையேறப்பெற்றது” (1 பேது. 3:4). சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் (மத். 5:5).
- உலகத்தின் பார்வையில் முத்து மிகவும் விலையேறப்பெற்றது. ஆனால் கர்த்தருடைய பார்வையில் தெய்வீகஞானமே விலையேறப்பெற்றதாயிருக்கிறது. “முத்துக்களைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது” (யோபு 28:18). முத்துக்களைப்பார்க்கிலும் குணசாலியான ஸ்திரீ உயர்ந்தவள் (நீதி. 31:10).
“பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக்கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்” (மத். 13:45,46). அப். பவுல் அந்த விலையேறப்பெற்ற முத்தாகக் கிறிஸ்துவையே காண்பார். ஆகவே, நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன், குப்பையுமாக எண்ணுகிறேன் (பிலி. 3:9-11) என்று சொன்னார்.
- உலகத்தின் பார்வையில் செல்வந்தர்களும், ஆளுநர்களும், அந்தஸ்துள்ளவர்களும் விலையேறப்பெற்றவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆனால் நமக்கோ, நமக்காக சிலுவையைச் சுமந்து, பாடுபட்ட கிறிஸ்துவே விலையேறப்பெற்றவர். காரணம் நமக்காக விலையேறப்பெற்ற இரத்தத்தை அவர் சிந்திக்கொடுத்தார் (1 பேது. 1:19). விலையேறப்பெற்ற விசுவாசத்தை நமக்குக் கற்றுக்கொடுத்தார் (1 பேது. 1:7). அவரே நம் நம்பிக்கைக்கெல்லாம் விலையேறப்பெற்ற மூலைக்கல்லானவர் (1 பேது. 2:6).
கிறிஸ்தவ மார்க்கத்தில் உலக ஐசுவரியங்களைப் பார்க்கிலும், விலையேறப் பெற்ற அநேகக் காரியங்கள் உண்டு. பாவ மன்னிப்பும், இரட்சிப்பின் சந்தோஷமும் மகா விலையேறப்பெற்றவை. பரிசுத்த ஆவியின் அபிஷேகமும், ஆவியின் நிறைவும் விலையேறப்பெற்றவை. கர்த்தர் கொடுக்கிற தெய்வீக சந்தோஷமும், சமாதானமும் மகா விலையேறப்பெற்றவை. நித்திய ஜீவனும், உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களும் விலையேறப்பெற்றவை. நீங்கள் விலையேறப் பெற்றவர்களும், விசேஷித்தவர்களுமாவீர்கள்.
நீங்கள் ஒருவேளை உலகத்தின் பார்வையிலே சாதாரணமானவர்களாய் காட்சியளிக்கக்கூடும். உங்களுடைய நெற்றியிலே கர்த்தர் தம்முடைய நாமத்தைத் தரித்து கர்த்தருக்குரியவன் என்ற உயர்வைத் தந்து விலையேறப்பெற்றவராக்கியிருக்கிறார். கர்த்தர் உங்களில் வைத்திருக்கிற அந்த எதிர்பார்ப்பை ஒருபோதும் நஷ்டப்படுத்தி விடாதிருங்கள்.
நினைவிற்கு:- “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேது. 1:19).