Appam, Appam - Tamil

மே 28 – ஆயிரம் பதினாயிரம்!

“நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவ தூதர்களினிடத்திற்கும்… வந்து சேர்ந்தீர்கள் (எபி. 12:22-24).

ஒருவன் கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவரிடம் நெருங்கி வரும்போது பல பாக்கியமான அனுபவங்களை கண்டடைகிறான். சீயோன் மலையினிடத்திற்கு வருகிறான், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமுக்கு வருகிறான்,

பரலோகத்தில் பேர் எழுதியிருக்கிற சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கு வருகிறான், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கு வருகிறான், இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினிடத்திற்கு வருகிறான். மட்டுமல்ல, ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களண்டைக்கு வருகிறான்.

நம்முடைய பரம பிதாவான கர்த்தருடைய குடும்பம் மிகப்பெரிய குடும்பம். இந்தக் குடும்பம் பூமியிலும் பரலோகத்திலும் நிரம்பி விரிந்துகிடக்கிறது. தேவனுடைய குடும்பத்திலே பூமியெங்கும் கோடிக்கணக்கான விசுவாசிகள் இருக்கிறார்கள். பரலோகத்திலே கோடிக்கணக்கான கேருபீன்கள், சேராபீன்கள், தேவதூதர்கள் இருக்கிறார்கள். ஆம், கிறிஸ்துவின் குடும்பம் எத்தனை மேன்மையானது!

‘ஒருவன் கிறிஸ்தவனாகிவிட்டால் அவன் தாழ்ந்த ஜாதிக்கு சென்றுவிட்டான், அரசாங்க சலுகைகளையெல்லாம் இழந்துவிட்டான், வேலை வாய்ப்புகளெல்லாம் பறிபோனது, தீண்டத்தகாதவனாகி ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிடக்கூடிய சூழ்நிலைக்கு வந்துவிட்டான்’ என்றெல்லாம் இன்று அநேகர் தவறாக எண்ணுகிறார்கள்.

ஒருவன் எவ்வளவு பாவியான மனுஷனாக இருந்தாலும், ஏழ்மையான நிலைமையில் இருந்தாலும், அவன் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, பரலோக தேவாதி தேவனண்டை வருகிறான். இராஜாதி இராஜாவின் பிள்ளை என்கிற பாக்கியத்திற்குள் வருகிறான். ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்கள் இருக்கிற குடும்பத்தினண்டை வருகிறான்.

நாம் தேவதூதர்களண்டை வருகிற அதே நேரத்தில் தேவதூதர்களும் நம்மண்டை வருகிறார்கள். நமக்காக கர்த்தர் தேவதூதர்களை சிருஷ்டித்து வைத்திருக்கிறார். அவர்கள் மாபெரும் சவுரியவான்களாக, பலசாலிகளாக வேகமாக பறந்து செல்லுகிறவர்களாக இருந்தபோதிலும், அவர்களையெல்லாம் கர்த்தர் நமக்குப் பணிவிடை ஆவிகளாகக் கொடுத்திருக்கிறார்.

வேதம் சொல்லுகிறது, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” (எபி. 1:14).

நம்மை வீழ்த்துவதற்கென்றும், சோதிப்பதற்கென்றும் சாத்தான் ஒரு பிசாசை அனுப்ப நினைத்தால், கர்த்தரோ நம்மைப் பாதுகாக்க அக்கினிமயமான இரதங்களையும், குதிரைகளையும், அதோடு ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களையும் அனுப்ப ஆயத்தமாயிருக்கிறார். தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் குடும்பத்தில் உறுதியாய் தரித்திருப்பீர்களா?

நினைவிற்கு:- “அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்” (2 இரா. 6:15,16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.