மே 26 – தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி!
“நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்கு சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” (1 பேது. 2:9).
வேத வசனங்களை பலமுறை திரும்பத்திரும்ப வாசிக்கும்பொழுது நாம் யார் என்பதையும் நம்மைக்குறித்து தேவனுடைய நோக்கம் என்ன என்பதையும் அறிந்துகொண்டு கர்த்தரை மகிமைப்படுத்த முடியும். கர்த்தருடைய பார்வையிலே நாம் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாகவும், அவருக்குச் சொந்தமான ஜனமாகவும் உள்ளோம்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆபிரகாமின் சந்ததியான இஸ்ரவேலரைக் கர்த்தர் தமக்கென்று தெரிந்துகொண்டார். அவர்களுக்கு வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். அவர்களோடு உடன்படிக்கை செய்தார். அவர்களுக்குள்ளே முற்பிதாக்களை எழுப்பினார். அவர்களுக்காக வழக்காடி யுத்தம்செய்தார். கானானிலிருந்து ஏழு ஜாதிகளையும் முப்பத்தியொரு ராஜாக்களையும் துரத்திவிட்டு பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை சுதந்தரமாகக் கொடுத்தார். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாய் இருந்தார்கள் என்பதே அதன் காரணம்.
ஆனால் புதிய ஏற்பாட்டுக்கு வரும்போது தேவன் கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார். நமக்காக தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தைச் சிந்தி பாவ மன்னிப்பையும் இரட்சிப்பின் சந்தோஷத்தையும் தந்தார். நமக்கு வாக்குத்தத்தங்களைக் கொடுத்து, தம்முடைய இரத்தத்தினாலே உடன்படிக்கையும் செய்தார். நமக்குப் பரம கானானாகிய பரலோக இராஜ்யத்தை வாக்குப்பண்ணி அன்போடு அழைத்துச்செல்லச் சித்தமானார்.
கர்த்தர் தாவீதைத் தெரிந்துகொண்டபோது தன் குடும்பத்திலே அற்பமாய் எண்ணப்பட்ட தன்னைத் தெரிந்துகொண்டு மேன்மைப்படுத்தின தயவை சிந்தித்துப்பார்த்து, “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் நான் என்னத்தைச் செலுத்துவேன்” என்று அவருடைய உள்ளம் நன்றியால் தேம்பினது. “இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்” என்றார்.
சிலரை ஆண்டவர் உபத்திரவத்தின் குகைகளிலேயும், தாயின் வயிற்றிலேயும் தெரிந்துகொள்ளுகிறார். ஆனால் சிலரையோ, உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே தெரிந்துகொள்ளுகிறார். அவருடைய தெரிந்துகொள்ளுதல் ஆச்சரியமானது. ஞானிகள் வெட்கப்படும்படி பேதமைகளைத் தெரிந்துகொள்கிறார். பலவான்கள் வெட்கப்படும்படி பெலவீனரைத் தெரிந்துகொள்ளுகிறார். அற்பமாய் எண்ணப்பட்டவர்களையும், பரதேசிகளையும் தெரிந்துகொள்ளுகிறார்.
ஆகவேதான் பேதுரு, “ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது” (1 பேது. 1:2) என்று குறிப்பிடுகிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் இந்த உலகத்திலே அந்நியரென்றும், பரதேசிகளென்றும் அழைக்கப்பட்டாலும்கூட நீங்கள் உன்னதமான தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டீர்களாயிருக்கிறீர்கள்.
நினைவிற்கு:- “ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்” (1 பேது. 2:5).