மே 25 – தெரிந்துகொண்டேன்!
“நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொல்லுவேன்” (ஏசா. 41:9).
“நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்” என்று கர்த்தர் அன்போடு பேசுகிற வார்த்தைகள் நம்முடைய கண்களிலே கண்ணீரை வரவழைக்கிறது. ஆம். நாம் கர்த்தருடையவர்கள், அவர் நம்முடையவர்.
கர்த்தருடைய தாசர்களுக்கும், அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கும் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் எவை? கர்த்தர் சொல்லுகிறார், “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள். உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்” (ஏசா. 41:10-12).
கர்த்தர் நமக்கு முன்பாக நான்கு வகையான கூட்டத்தாரை நிறுத்துகிறார். 1. நம்மேல் எரிச்சலாயிருக்கிறவர்கள், 2. நம்மோடு வழக்காடுகிறவர்கள், 3. நம்மோடு போராடுகிறவர்கள் 4. நம்மோடு யுத்தம்பண்ணுகிறவர்கள். அவ்வளவு பேரையும் கர்த்தர் ஒருபக்கத்தில் நிறுத்தி அவரே நமக்காக வழக்காடி யுத்தம் செய்து அவர்களை இல்லாமல் போகச்செய்கிறார் என்றால் அவருடைய அன்பு எவ்வளவு பெரியது!
இன்று நீங்கள் ‘ஒரு அனாதைபோல் இருக்கிறேனே, எனக்கு உதவுவார் ஒருவரும் இல்லையே, என் வேதனையை யார் விசாரிப்பார்? எனக்காக பரிந்து பேசுகிறவர் யார் உண்டு? ஐயோ என் நியாயங்கள் புரட்டப்படுகிறதே’ என்றெல்லாம் சொல்லி கலங்கலாம். ஆனால் கர்த்தரோ உங்களுடைய அருகில் நின்று ‘நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்’ என்று வாக்களிக்கிறார்.
நான் இரட்சிக்கப்பட்டபோது, ஏசாயாவின்மூலம் கர்த்தர் பேசின வார்த்தைகளையெல்லாம் எண்ணி எண்ணி ஆனந்தக்கண்ணீர் விட்டிருக்கிறேன். இந்த வாக்குத்தத்த வசனங்களெல்லாம் என்னை அதிகமாய் ஆற்றித் தேற்றின. அவை அன்றைக்கு இனிமையாய் இருந்ததுபோலவே இன்றைக்கும் இனிமையுள்ளதாய் இருக்கின்றன. மேலும், அவை வல்லமையுள்ளதாகவும் இருக்கிறது. கர்த்தர் நம்முடைய பட்சத்தில் நிற்கும்போது யார் நமக்கு எதிர்த்து நிற்க முடியும்? (ரோம. 8:31). ‘கர்த்தர் என் சகாயர், மனுஷன் எனக்கு என்ன செய்வான்?’ என்று நம்மால் சவால்விட்டுக் கூறமுடியும். ‘கர்த்தரை நான் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தியிருக்கிறேன், நான் அசைக்கப்படுவதில்லை’ என்று சொல்ல முடியும்.
தொடர்ந்து ஏசாயா 41-ஆம் அதிகாரத்தில் வரும் வாக்குத்தத்தங்களையும் இன்றைக்கு சுதந்தரித்துக்கொள்ளுங்கள். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்” (ஏசா. 41:13,14).
நினைவிற்கு:- “இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசா. 43:1).