மே 21 – தேவ பெலத்தினால் வழிநடத்துவார்!
“நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்” (யாத். 15:13).
கர்த்தர் நம்முடைய மேய்ப்பர். நாம் அவருடைய மேய்ச்சலின் ஆடுகள். மந்தையை மேய்ப்பன் நடத்துகிறதுபோல கர்த்தர் நம்மை அருமையாய் வழிநடத்துகிறபடியால் நாம் தாழ்ச்சியடைவதுமில்லை, குறைவுபட்டுப்போவதுமில்லை.
மேய்ப்பன் எல்லா ஆடுகளையும் ஒன்றுபோல நடத்துவதில்லை. கரவல் ஆடுகளை மெதுவாய் நடத்துவார். சினை உள்ள ஆடுகளை ஜாக்கிரதையாயும், பக்குவமாயும் வழிநடத்துவார். கால்முறிந்த ஆட்டை தோளின்மேல் சுமந்து வழிநடத்துவார். இஸ்ரவேல் ஜனங்கள் பல லட்சம்பேராய் இருந்தாலும், நாற்பது வருடங்கள் அவர்களை வனாந்தரத்திலே அருமையாய் வழிநடத்திக்கொண்டுவந்தார்.
கர்த்தர் அவர்களை நடத்திக்கொண்டுவந்ததினாலே காலைதோறும் மன்னா அவர்களுக்குப் பொழிந்தது. இறைச்சியை விரும்பியபோது காடைகள் அவர்கள் பாளையத்திலே குவிந்தன. தாகம் ஏற்பட்டபோதெல்லாம் கன்மலையிலிருந்து அவர்களுக்கு தண்ணீர் சுரந்துவந்தது. அவர்களுடைய வஸ்திரங்கள் பழையதாகிப் போகவில்லை. நடந்ததினால் அவர்களுடைய கால்கள் வீங்கிப்போகவும் இல்லை (உபா. 8:4). கர்த்தர் அவர்களை நடத்தினதால் காண்டாமிருகத்துக்கொத்த பெலத்தோடு அவர்கள் முன்னேறிச் சென்றுகொண்டேயிருந்தார்கள். அந்த தேவன் உங்களையும் நடத்துவார்.
நாங்கள் ஒவ்வொரு முறை இஸ்ரவேல் தேசத்திற்குச் செல்லும்போதும் எங்களை வழிநடத்திச்செல்ல யூத வழிகாட்டி ஒருவர் வருவார். ஒவ்வொரு இடத்தையும் எங்களுக்கு விளக்கிக்காண்பிப்பார். அனுமதி பெறவேண்டிய இடங்களில் அவரே போய் அனுமதியை வாங்கிவருவார். என்ன பிரச்சனைகள் வந்தாலும் அவரே முன்னின்று அவற்றுக்குத் தீர்வு கண்பார்.
இந்த உலகப்பயணத்திலேயும்கூட நமக்கு ஒரு வழிகாட்டி தேவை. சத்தியத்தின் பாதையிலே வழிநடத்துகிற வழிகாட்டி தேவை. பரமகானானுக்குள், நித்திய இராஜ்யத்திற்குள் செல்லுகிறவரையிலும் அந்த வழிகாட்டி நம்மை வழிநடத்திக்கொண்டே செல்வார். சாஸ்திரிகளுக்கு வழிகாட்ட நட்சத்திரம் முன்சென்றது. நமக்கு வழிகாட்ட பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாய் தாவீதின் வேரான இயேசுகிறிஸ்து இருக்கிறார். அவர் நம்மை அருமையாய் வழிநடத்துவார்.
இஸ்ரவேல் ஜனங்களுக்கு வழிகாட்ட மேகஸ்தம்பங்கள் வந்து நின்றன. இரவில் அக்கினி ஸ்தம்பங்கள் வந்து நின்றன. கானானைச் சுதந்தரிக்கிறவரையிலும் இரவும் பகலும் அவை அவர்களை வழிநடத்திக்கொண்டே சென்றன. ‘நீரே என்னை வழி நடத்தும் ஆண்டவரே’ என்று தங்களுடைய வாழ்க்கையை யார் யார் அவருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாகவே பாக்கியவான்கள்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் இந்தப் பயணத்திலே உங்களோடு இருந்து உங்களை வழிநடத்திவருகிறாரா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அவர் கூடவருவாரானால் முழு பரலோகமும் உங்களோடுகூட வரும். வழிப்பிரயாணத்திற்கு வேண்டிய கிருபைகளையும், வரங்களையும், வல்லமையையும், சத்துவத்தையும், பெலனையும் அவர் உங்களுக்குத் தந்துகொண்டேயிருப்பார்.
நினைவிற்கு:- “இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்” (சங். 80:1).