Appam, Appam - Tamil

ஜூன் 14 – ஒரு தாலந்து!

“ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான் (மத். 25:15).

கர்த்தர் நம்மை சிருஷ்டித்து உருவாக்கினவராக மட்டுமல்லாமல் நமக்குத் தாலந்துகளையும், திறமைகளையும், விசேஷ கிருபைகளையும் கொடுத்து ஆசீர்வதிக்கிறவராயுமிருக்கிறார். இந்த தாலந்துகளின் வகையும், எண்ணிக்கையும் ஒவ்வொருவருக்குள்ளும் வித்தியாசப்படுகிறது.

தேவனுடைய பிள்ளைகளுக்கு தாலந்துகள் இருக்கிறதுபோலவே உலகத்தாருக்கும் பலவிதமான தாலந்துகள் இருக்கின்றன. உலகத்தார் தங்களுடைய தாலந்துகளைக்கொண்டு முன்னேறி பேரும், புகழும் பெறுகிறார்கள். பொருள் ஈட்டுகிறார்கள். அவர்களில் சிலர் தங்களுடைய தாலந்துகளை சாத்தானுக்கு விற்றுப்போட்டு அவனுக்கு ஊழியம் செய்கிறார்கள். ஆனால், தேவனுடைய பிள்ளைகளாகிய நாமோ, நம்முடைய தாலந்துகள் திறமைகள் எல்லாவற்றையும் கர்த்தருடைய நாம மகிமைக்காக பயன்படுத்தவேண்டும்.

நாம் இரட்சிக்கப்படும்போது கர்த்தர் நமக்குக் கொடுக்கிற முதல் தாலந்து ஜெபம் ஆகும். ஜெபம் ஒரு விலையேறப்பெற்ற தாலந்தாகும். ஜெபத்தில் தேவனை ‘அப்பா பிதாவே’ என்று சந்தோஷமாக அழைக்கிறோம். அவரிடத்தில் மனம்விட்டு பேசுகிறோம். ஆரம்பத்தில் தேவனுக்கும் நமக்கும் இடையில் ஜெபம் ஒரு உறவாக இருக்கிறது. பின்போ அது மற்றவர்களுக்காக மன்றாடவும், தேசத்திற்காக திறப்பிலே நிற்கவும், தளர்ந்துபோகிற ஆத்துமாக்களுக்காக வேண்டுதல் செய்யவும் மிகவும் உதவியாக இருக்கிறது.

அந்த ஒரு தாலந்தை பெற்றதோடு நின்றுவிடக்கூடாது. அந்த ஒரு தாலந்தை பயன்படுத்தி இன்னொரு தாலந்தை சம்பாதிக்கவேண்டும். ஜெபம் என்ற தாலந்திலிருந்து மன்றாட்டு என்ற தாலந்துக்கு வரவேண்டும். அடுத்து, விண்ணப்பத்தின் ஆவி என்ற தாலந்துக்கு வரவேண்டும். இப்படி நாம் நம்முடைய தாலந்துகளை பயன்படுத்தும்போது, கர்த்தர் மேலும் அதிகமான ஆவிக்குரிய தாலந்துகளை நமக்குத் தந்தருள்வார்.

வேதத்திலே ஒரு தாலந்தைப் பெற்றவன் அதைக்கொண்டு மற்ற தாலந்துகளை சம்பாதிக்கவில்லை. தன்னுடைய திறமைகளை விருத்தி செய்துகொள்ளவுமில்லை. பெற்ற தாலந்தைக் கொண்டுபோய் புதைத்து வைத்துவிட்டான். இதனால் எஜமானனுக்கு ஏற்பட்டது நஷ்டமே. எஜமானனுடைய எதிர்பார்ப்புகளிலிருந்து அவன் தவறிவிட்டான். தாலந்துகளைப் பெற்றிருந்தும் நோக்கத்தை நிறைவேற்றாமல் இருந்துவிட்டான்.

இந்த கொஞ்ச கால வாழ்க்கையிலே தாலந்தைப் பயன்படுத்தி கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களை செய்யாமல் அந்த மனிதன் தவறிவிட்டான். மட்டுமல்ல, அவன் எஜமானையே குற்றஞ்சாட்ட ஆரம்பித்தான். ‘நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்’ என்று சொன்னான். எத்தனை துணிகரமான வார்த்தை அது! அன்புள்ள ஆண்டவரை எவ்வளவாய் இது துக்கப்படுத்தியிருந்திருக்கும்!

தேவபிள்ளைகளே, இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கும்கூட பல தாலந்துகளைக் கொடுத்திருக்கலாம். நீங்கள் உங்களுடைய தாலந்துகளை கர்த்தருடைய நாம மகிமைக்காகவும், தேவனுடைய பணிக்காகவும் பயன்படுத்தும்போது அவர் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்” (ரோம. 14:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.