ஜூன் 06 – தேவனுக்கேற்கும் பலி!
“தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங். 51:17).
பொதுவாக எல்லோரும் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையுமே நாடுவார்கள். ஆடல் பாடல்களோடு, உற்சாகமாய் இருப்பதையே விரும்புவார்கள். கர்த்தர் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களைத் தரவேண்டுமென்றால், நாம் நொறுங்குண்ட, நருங்குண்ட இருதயத்தோடு ஜெபிக்கிறவர்களாய் இருக்கவேண்டும்.
நமக்கு சூழ்நிலை சாதகமாய் இருக்கும்பொழுது தேவனைத் துதித்து மகிழும் நாம், சூழ்நிலை எதிராய் இருக்கும்பொழுது கர்த்தரைத் துதிக்கிறோமா? “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (ஆப. 3:17,18) என்பதே ஆபகூக் செய்த தீர்மானம்.
நஷ்டங்களும், கஷ்டங்களும் வரும்பொழுது துதிப்பது கஷ்டமான ஒரு காரியம்தான். ஆனால் யார் யார் தங்களுக்கு முன்பாக இருக்கிற தீமைகளை கர்த்தர் நன்மையாக மாறப்பண்ணுவார் என்கிற விசுவாசம் உடையவர்களாய் இருக்கிறார்களோ, அவர்கள் கர்த்தரைத் துதிப்பார்கள். கர்த்தரில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது என்பதை யார் யார் அறிந்திருக்கிறார்களோ, அவர்கள் கர்த்தரைத் துதிப்பார்கள். துதியுடன்கூடிய ஜெபம் அந்தகார வல்லமைகளை உடைத்து, தேவனுடைய வெளிச்சத்தையும் ஆசீர்வாதத்தையும் கொண்டுவரும். விசுவாசத்தை உறுதிப்படுத்தி மெய் சமாதானத்தைத் தரும்.
அன்னாளுக்கு குழந்தை இல்லாததினால் மலடி என்று அவளது சக்களத்தி பரிகாசம்செய்தாள். அவளுடைய வாழ்க்கை சீர்ப்பட, நொறுங்குண்ட இருதயத்தோடு மனங்கசந்து ஜெபிக்கவேண்டியது அவசியமாய் இருந்தது. அவள் கண்ணீரோடு ஜெபித்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்டு ஆசீர்வாதமான சாமுவேலைத் தந்தருளினார்.
நீங்கள் நொறுங்குண்ட, நருங்குண்ட இருதயத்தோடு தேவனை நோக்கிப்பார்க்கும்பொழுது, தேவனுடைய கிருபையின் கரம் உங்களை அரவணைப்பதைக் காண்பீர்கள். அன்பின் கரம் உங்களைத் தேற்றுவதை அறிந்துகொள்வீர்கள். சாதாரண நிலைமையில் ஒரு மனிதன் கற்றுக்கொள்ளக்கூடிய ஆவிக்குரிய பாடங்களைப்பார்க்கிலும், சோதனையும், போராட்டமும் நிறைந்த சூழ்நிலையில் மிகமிக மேன்மையான ஆவிக்குரிய இரகசியங்களை அறிந்துகொள்ளுகிறான். அவன் நெருக்கப்படும்பொழுது, அவனுக்குள் இருக்கும் சுயம் என்னும் அகந்தை அகற்றப்பட்டவனாய் “இனி நான் அல்ல கிறிஸ்துவே” என்று உணரத் துவங்குகிறான்.
தாவீது இராஜாவுக்கு பல உபத்திரவங்களும், பாடுகளும், போராட்டங்களும் வந்தன. முடிவில் அவர் என்ன சொன்னார் தெரியுமா? “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்” (சங். 119:71) என்பதே அவர் சொன்னது.
நினைவிற்கு:- “உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோம. 12:1).