Appam, Appam - Tamil

ஜூன் 04 – கர்த்தரைத் தேடுங்கள்!

“சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது (சங். 34:10).

கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. இது கர்த்தருடைய அசைக்க முடியாத வாக்குத்தத்தம். அநேகர் குறைவுபட்டுக் கடன் பிரச்சனைகளுக்குள்ளும், வறுமைக்குள்ளும் செல்லுகிறதற்கு முக்கியமான காரணம் அவர்கள் கர்த்தரை சரிவர தேடாததுதான்.

காட்டுக்கு ராஜா என்று அழைக்கப்படுகிற பெரிய சிங்கங்கள்கூட பஞ்சகாலங்களில் தாழ்ச்சியடைந்துவிடக்கூடும். அதனுடைய குட்டிகள் பசியால் வாடக்கூடும். ஆனால் இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா தம்முடைய பிள்ளைகளை ஒரு நாளும் தாழ்ச்சியடைய விடவேமாட்டார். அவர்களுக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது. கர்த்தரைத் தேடின தாவீது, “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்; நான் தாழ்ச்சியடைவதில்லை. குறைவுபட்டுப்போவதுமில்லை, தள்ளாடுவதுமில்லை” என்று எவ்வளவாய் அனுபவித்துச் சொல்லுகிறார் பாருங்கள்!

ஆகவேதான் தாவீது தன்னுடைய முதிர்வயதிலே பட்டத்து இளவரசரான சாலொமோனுக்கு கொடுத்த முக்கிய ஆலோசனை ‘நீ கர்த்தரைத் தேடவேண்டும்’ என்பதாக இருந்தது. “என் குமாரனாகிய சாலொமோனே, …. நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்” (1 நாளா. 28:9).

பல வேளைகளில் நம்முடைய அதிகமான வேலைகளினிமித்தம் கர்த்தரைத் தேடாமல் இருந்துவிடுகிறோம். கவலைகளும், பிரச்சனைகளும், சோர்வுகளும் நம்மை நெருக்கி கர்த்தருடைய பாதத்திலே உட்காரவிடாமல் செய்துவிடுகின்றன. இதனால் எண்ணற்ற பிரச்சனைகளையும், சத்துருக்களையும் சந்திக்க வேண்டிய நிலை வருகிறது. பாவ வலைகளின் கண்ணிகளில் சிக்கி அவதியுறுகிறோம்.

தேவபிள்ளைகளே, வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பது நல்லது. ஒவ்வொருநாளும் முதலாவது கர்த்தரைத் தேட ஒப்புக்கொடுங்கள். “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்” என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம் அல்லவா? (மத். 7:7). இயேசு கிறிஸ்து சொன்னார், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்” (மத். 6:33).

கர்த்தரைத் தேடுவதினால் வருகிற ஆசீர்வாதங்கள் எவை? 1. கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்கிறது (சங். 105:3). 2. கர்த்தரைத் தேடுகிறவர்கள்மேல் அவருடைய கரம் நன்மையாக இருக்கிறது (எஸ்றா 8:22). 3. கர்த்தரைத் தேடுகிறவர்களை அவர் கைவிடுகிறதில்லை (சங். 9:10). கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள் (நீதி. 28:5). 5. கர்த்தரைத் தேடுகிறவர்கள்மேல் அவர் நீதியை வருஷிக்கப்பண்ணுகிறார் (ஓசி. 10:12). 6. கர்த்தரைத் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் (சங். 119:2).

கர்த்தரைத் தேடி தங்களுடைய பிரச்சனைகள் நீங்கப் பெற்றவர்கள் அநேகம்பேர். இராஜாவாகிய ஆசாவின் நாட்களிலே கர்த்தரைத் தேடினதினால் பெரிய எழுப்புதல் ஏற்பட்டது (2 நாளா. 14:11). அதன்படி அவர்கள் கர்த்தரைத் தேடினபோது கர்த்தர் எல்லா சத்துருக்களின் கைகளிலிருந்து நீங்கலாக்கி மீட்டு பூரண இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார். தேவபிள்ளைகளே, கர்த்தரைத் தேடுங்கள். சமாதானத்தையும், சந்தோஷத்தையும், ஆசீர்வாதத்தையும் நிச்சயம் பெறுவீர்கள்.

நினைவிற்கு:- “தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்” (சங். 14:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.