ஜூன் 01 – விலகுவதில்லை!
“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை” (யோசு. 1:5).
கர்த்தருடைய எல்லா வாக்குத்தத்தங்களிலும் இந்த வாக்குத்தத்தம் மிகவும் விசேஷமானதாகும். யோசுவாவுக்கு இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுத்த தேவன் ஏறக்குறைய 1300 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த வாக்குத்தத்தத்தை நிலைப்படுத்துகிறார். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே என்று அப்போஸ்தலனாகிய பவுல்கூட நினைப்பூட்டுகிறார் (எபி. 13:5).
ஆம், கர்த்தருடைய வாக்குத்தத்தம் அவருடைய பிள்ளைகளுக்கு என்றென்றைக்கும் உரியது. நாம் அவருடைய பிடியை விடலாம்; அவரை விட்டு விலக நினைக்கலாம். ஆனால், கர்த்தரோ நம்மேல் வைத்த அன்புப்பிடியை விடுவதும் இல்லை; நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதும் இல்லை.
ஒரு சிறுவனுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கிறவர் அவன் இடுப்பில் உறுதியான கயிற்றைக் கட்டி தம் கையில் பிடித்துக்கொள்ளுகிறார். அவன் தண்ணீரில் நீந்த ஆரம்பிக்கிறான். அவரோ கரையில் நின்று அவன் அமிழாதபடி கயிற்றைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார். அவர் கயிறை இறுக்கிப் பிடித்திருப்பாரானால் அவனால் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கவே முடியாது.
ஆகவே அவர் தன் கையில் உள்ள கயிற்றைச் சற்றே தளர்த்தி விட்டுக்கொடுத்து அவன் நீந்துகிறானா என்பதைக் கவனிக்கிறார். ஆனால் அவனோ ஒரு சமயம் சரியாய் நீந்துகிறான். மற்ற நேரம் அமிழ்ந்துபோகிறான். ஆனால் அவன் அமிழ்ந்து மரிப்பதற்கு மேலே நிற்கிறவர் விடுகிறதில்லை. அவன் தண்ணீரிலே மூழ்க ஆரம்பிக்கிறான் என்று அறிந்ததும் கயிற்றை மேலே இழுத்து மீண்டும் நீந்தும்படிச் சொல்லுகிறார். அவனோ பயப்படுகிறான். அவர் மேலே இருந்து நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. எப்பொழுதும் உன்னை என் கையில் ஏந்தியிருக்கிறேன் என்று சொல்லுகிறார். அவனுக்கு எத்தனை ஆறுதலும், சந்தோஷமுமாய் இருக்கும்!
பல வேளைகளிலே நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் நீந்தக் கற்றுக்கொள்வதற்கு கர்த்தர் வாய்ப்புகளைத் தருகிறார். தம்முடைய கயிற்றை விட்டுப்பிடிக்கிறார். நாம் அந்த வேளையில் கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்கவில்லை என்று சொல்லித் தவிக்கிறோம். ஆனால் கர்த்தரோ, மனுஷனைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிற்றினால் நம்மைக் கட்டி தன்னோடு இணைத்து வைத்திருக்கிறார்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய அன்பு எப்போதும் நம்மைத் தொடர்ந்துகொண்டே வருகிறது. காணாமல்போன ஆட்டைப்போல அவர் நம்மைத் தேடுகிறார். காணாமல்போன வெள்ளிக் காசை கண்டுபிடித்து மகிழ்வதைப்போல அவர் மகிழுகிறார். கெட்டகுமாரன் திரும்பி வருமளவும் ஏங்கி எதிர்பார்த்திருந்த தகப்பனைப்போல நமக்காக எதிர்பார்த்திருக்கிறார். நான் உன்னைவிட்டு விலக விரும்பவில்லை. உன்னைக் கைவிட விரும்பவில்லை என்று சொல்லி அரவணைத்து அன்பு முத்தமிடுகிறார்.
நினைவிற்கு:- “நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20).