Appam, Appam - Tamil

ஆகஸ்டு 22 – மன்னிக்கிறதுபோல, மன்னியும்!

“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் (மத். 6:12).

இந்த வசனத்தை நாம் லூக்கா எழுதின சுவிசேஷத்தில் வாசிக்கும்போது, “எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே” (லூக். 11:4) என்று எழுதப்பட்டிருக்கிறதைப் பார்க்கிறோம். பொதுவான ஜெபத்தில்கூட “எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும்” என்று நாம் சொல்லி ஜெபிக்கிறோம்.

இது ஒரு நிபந்தனையின் ஜெபமாகும். மன்னிக்கிறதுபோல மன்னியும் என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் மன்னித்தால்தான் உங்களுக்கு மன்னிப்பு. மன்னிக்காவிட்டால் மன்னிப்பு இல்லை. நீங்கள் மற்றவர்களை மன்னிக்காவிட்டால், கர்த்தர் உங்களுடைய ஜெபத்தை கேட்பதுமில்லை, பதில் கொடுப்பதுமில்லை.

ஒருநாள் எங்களுடைய அலுவலகத்திற்கு ஒரு தாயார் வந்து, கண்களில் கண்ணீர் வழிய, ‘ஐயா, என் மகளைத் திருமணம் செய்துகொடுத்த வீட்டில் அவளை மிகவும் கொடூரமாய் நடத்துகிறார்கள்’ என்று சொல்லி வருந்தினார். அதேநேரத்தில் அவரை அறிந்த ஒரு பெரியவர் தற்செயலாக அலுவலத்துக்கு வந்துவிட்டார். “அம்மா, உங்களுடைய நீலிக்கண்ணீரை கொஞ்சம் நிறுத்துங்கள். நீங்கள் உங்களுடைய மருமகளை எவ்வளவு கொடூரமாய் நடத்துகிறீர்கள் என்பதை ஊரே அறியும். இப்படியிருக்க, உங்களுடைய மகளை அவளது மாமியார் கொடுமையாய் நடத்துகிறார் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்று அவர் சொல்ல, அந்தப் பெண் வாயடைத்துப் போனார்.

இயேசு கிறிஸ்து சொன்னார், “நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்” (மாற். 11:25,26).

மன்னிக்கிற மாட்சியை கிறிஸ்துவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளமுடியும். அநியாயமான குற்றச்சாட்டுகளை அவர் சந்தித்தார். பிலாத்துவின் முன்பும், ஏரோதுவின் முன்பும், பிரதான ஆசாரியர்கள் முன்பும் அநியாயமான விசாரணைக்கு அவர் உட்பட்டார், கொடூரமாய் சிலுவையில் அறையப்பட்டார். அந்த நேரத்திலும் “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று சொல்லி அவர்களுக்காக மன்றாடினார். ஆம், கிறிஸ்து என்ன போதித்தாரோ அந்த போதனையைப் பின்பற்றி ஒரு முன்மாதிரியாய் விளங்கினார்.

சிலவேளைகளில் நீங்கள் மற்றவர்களை காயப்படுத்திவிடக்கூடும். உடனே உங்களைத் தாழ்த்தி, மன்னிப்பு கோருங்கள். சமாதானமாகிவிடுவதற்கு என்னென்ன முயற்சிகளையெல்லாம் எடுக்க முடியுமோ, அதை அன்போடு எடுத்து ஒப்புரவாகிக்கொள்ளுங்கள்.

தேவபிள்ளைகளே, மற்றவர்கள் உங்களை வேதனைப்படுத்தி இருந்தால், நீங்கள் காயங்களோடும், வேதனையோடும் வாழாமல், மனப்பூர்வமாக அவர்களை மன்னித்து, அவர்களது செயலை மறந்துவிடுங்கள். மன்னிப்பு என்ற ஔஷதம் காயங்களை ஆற்றும். மனப்பாரங்களை நீக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.

நினைவிற்கு:- “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” (மத். 6:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.