அக்டோபர் 22 – விசுவாசமாய் இருங்கள்!
“தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவா. 14:1).
கலக்கத்தை மாற்றி சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொண்டுவரும் வல்லமை விசுவாசத்திற்கு உண்டு. “விசுவாசிக்கிறவன் பதறான்” (ஏசா. 28:16). என்றும் “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவா. 5:4) என்றும் வேதம் சொல்லுகிறது. உலகத்தை ஜெயிப்பவர்கள் ஒருநாளும் கலங்கமாட்டார்கள்.
இன்றைக்கு, அநேகர் தங்களுடைய நம்பிக்கையையும், விசுவாசத்தையும் மனுஷர்மேலும், பணத்தின்மேலும், இனஜன பந்துக்கள்மேலும் வைக்கிறார்கள். உங்கள் விசுவாசம் யார்மேல் வைக்கப்பட்டிருக்கிறது? ‘தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள். என்னிடத்திலும் விசுவாசமாய் இருங்கள்’ என்றார் இயேசுகிறிஸ்து.
“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (எபி. 11:6). கிறிஸ்தவ அஸ்திபாரமே விசுவாசத்தில்தான் இருக்கிறது. அஸ்திபார உபதேசங்களைப்பற்றிப் பேசின அப்.பவுல் தேவன்பேரில் வைக்கும் விசுவாசத்தைக்குறித்து திட்டமாய்ப் போதித்தார் (எபி. 6:1). கிறிஸ்துவாகிய அஸ்திபாரத்தின்மேல் தேவனுக்கேற்ற மாளிகையாகக் கட்டி எழுப்பப்படவேண்டுமானால் தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள்.
கிறிஸ்தவ மார்க்கத்தில் ஏறக்குறைய எல்லாமே விசுவாசத்திலிருந்துதான் வருகிறது. விசுவாசத்தினாலே இரட்சிப்பு உண்டு (எபே. 2:8). கிறிஸ்து எனக்காக மரித்தார், அடக்கம்பண்ணப்பட்டார், உயிரோடு எழுந்தார் என்பதை விசுவாசித்த பிறகே ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க முன்வரவேண்டும். “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” (மாற். 16:16).
விசுவாசத்தினாலேதான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறமுடியும். இயேசு சொன்னார்: “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்” (யோவா. 7:38,39).
தெய்வீக சுகத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொள்ளவேண்டுமா? உங்களுக்கு விசுவாசம் அவசியம். “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்” (யாக். 5:15). பரிசுத்தத்தைப் பெறவும் விசுவாசம்தான் வேண்டும். விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்குகிறார் (அப். 15:9). தேவன் பேரில் விசுவாசமுள்ளவர்கள் ஜெயங்கொண்டவர்களாக விளங்குவார்கள். “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவா. 5:4).
விசுவாசத்தினாலே பிழைப்பு உண்டு. ஆகவேதான், மார்டின் லூத்தர் “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ரோம. 1:17) என்ற வாக்குக்கேற்ப விசுவாசத்தை முற்றிலுமாய்ச் சார்ந்திருந்தார். இயேசு சொன்னார், “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” (யோவா. 14:19). தேவபிள்ளைகளே, கர்த்தரை விசுவாசியுங்கள். நீங்கள் கவலைப்பட்டு கலங்கவேண்டிய அவசியமேயில்லை.
நினைவிற்கு:- “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்” (யோவா. 11:40).