அக்டோபர் 23 – ஆயத்தம்பண்ணின பின்பு!
“நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவா. 14:3).
இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தர் பாலும் தேனும் ஓடுகிற கானானை ஆயத்தம்பண்ணினார். அது ஆயத்தமாகிறவரையிலும் அவர்கள் அடிமைகளைப்போல எகிப்திலே வாழ்ந்துவந்தார்கள். ஒருபக்கம் கானானிலுள்ள சகல காட்டு மிருகங்களும் அழிக்கப்படவேண்டும். சீர்திருத்தப்படவேண்டும். வீடுகளும், திராட்சத்தோட்டங்களும் நாட்டப்படவேண்டும். மறுபக்கம் அங்குள்ள ஜாதிகளின் பாவங்கள் பூரணமாக்கப்பட வேண்டும்.
அதற்குப் பின்பு, கர்த்தர்தாமே இறங்கி வந்து, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலே இஸ்ரவேலரை மீட்டுக்கொண்டு, மேக ஸ்தம்பங்களும் அக்கினி ஸ்தம்பங்களும் வழி நடத்த, கானானைச் சென்றடையச்செய்தார். அது இஸ்ரவேலருக்காக வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட இடம். அங்கே தாங்கள் கட்டாத வீடுகளையும், நாட்டாத திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்குப் பரம கானான் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் எப்படியோ வந்து பரம கானானைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லாமல், “நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” என்று அன்போடு சொல்லுகிறார். “நான் மறுபடியும் வருவேன்” இரண்டாம் வருகையில் வரும்போது மரியாளின் மகனாகவோ, பால்குடி பாலகனாகவோ அல்லாமல் பிதாவின் மகிமை பொருந்தினவராய் தேவதூதர்களுடைய எக்காளத்தோடு வானத்திலிருந்து அவர் இறங்கி வருவார்.
கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையைப்பற்றி வேதத்தில் ஆயிரத்து எழுநூற்று இருபத்தைந்து வாக்குத்தத்தங்கள் இருக்கின்றன. புதிய ஏற்பாட்டில் பதினொரு வசனத்திற்கு ஒரு வசனம் வீதம் கிறிஸ்துவினுடைய வருகையைச் சுட்டிக்காண்பிக்கிறது. முதல் வருகையைக்குறித்து ஒரு வசனம் வேதப்புத்தகத்தில் இருந்தால், அவருடைய இரண்டாவது வருகையைக்குறித்து எட்டு வசனங்கள் இருக்கின்றன. தெசலோனிக்கேயருக்கு எழுதின இரண்டாம் நிருபத்தின் மைய செய்தி கிறிஸ்துவின் இரண்டாவது வருகையே.
மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருவேன் என்று அவர் சொல்லும்போது, “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” (வெளி. 22:20) என்று நீங்கள் உற்சாகமாய் சொல்லுபவர்களாக இருக்கவேண்டும். கிறிஸ்து நமக்காக ஆயத்தம்பண்ணியிருக்கிற இடத்தை தம்முடைய சீஷனாகிய யோவானுக்குக் காண்பித்தார். “யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” (வெளி. 21:2) என்றார்.
புதிய எருசலேமுக்கு நம்மை அழைத்துச்செல்ல கர்த்தர் தம்முடைய தூதர்களையோ, கேருபீன்களையோ அனுப்பிவிட்டு பேசாமல் இருந்துவிடப்போவதில்லை. அவர்தாமே வந்து நம்மை அழைத்துச்செல்வாராம். அப்படியானால் நாம் கர்த்தருடைய பார்வையிலே எவ்வளவு கனம் பெற்றவர்கள்! மணவாட்டியை அழைக்க மணவாளன்தானே வரவேண்டும்!
நினைவிற்கு:- “உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெச. 4:17).