Appam, Appam - Tamil

ஜூலை 30 – ஆலயம் எப்படிப்பட்டது!

“கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது (ஏசா. 66:1).

பூர்வகாலம் தொடங்கி ஜனங்கள் கடவுளை வழிபட பல இடங்களைத் தேடி தெரிந்துகொள்ளுகிறார்கள். செல்வந்தர்கள் மாட மாளிகையையும், கூடகோபுரத்தையும் எழுப்பி இறைவனை வழிபடுகிறார்கள். ஏழை மக்கள் சிறிய ஆலயத்தைக் கட்டுகிறார்கள். சிலர் மரத்தடியிலும், சிலர் மலைகளிலும் கடவுளுக்கு ஆலயம் கட்டுகிறார்கள்.

ஆனால் “வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி. நான் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவர். நான் உள்ளே வரும்படி யாரால் எனக்கு ஆலயம் கட்டமுடியும்?” என்று ஆண்டவர் கேட்கிறார். அண்டம் கொள்ளாமல், ஆகாயம் கொள்ளாமல், மண்டலங்கள் கொள்ளாமல், வானமும் கொள்ளாமல் இறைவனுக்கு நாம் எப்படி அப்படிப்பட்ட ஆலயத்தைக் கட்ட முடியும்.

இறைவன் தன்னுடைய வார்த்தையால் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் உண்டாக்கினவர். அவர் எவ்வளவு பெரியவர் என்ற உணர்வு சிறிதும் இல்லாமல் ஒரு சிறிய கல்லை வைத்து, அதையே கோவிலாக்கி இறைவனை உள்ளேவைத்து வெளியே பூட்டையும் தொங்கவிடுகிறார்கள்.

கடவுளே தனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டியிருக்கிறார் என்பதையும், கடவுள் கட்டிய ஆலயம் கல்லினாலும், செங்கலினாலும் கட்டப்பட்டதில்லை என்பதையும், அந்த ஆலயம் அது நம்முடைய சரீரமாகவே இருக்கிறது என்பதையும், நாமே அவருடைய ஆலயம் என்பதையும் மனிதன் மறந்துவிட்டான்.

வேதம் சொல்லுகிறது: “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்;

தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்” (1 கொரி. 3:16,17). இறைவன் மனிதனுடைய சரீரத்திலே வாசமாயிருக்க விரும்புகிறார். ஆனால் மனிதனோ அவரைத் தன்னைவிட்டு விலக்கி அவரை எங்கேயாவது கொண்டுபோய் வைத்து, பூட்டிவிடவே விரும்புகிறான்.

காரணம் என்ன? கடவுள் தனக்குள் இருப்பாரென்றால் தன்னால் மனம்போல வாழ முடியாது. மனம்போல சிகரெட் ஊதியும், குடித்தும் வெறிக்க முடியாது. சிகரெட் புகையும், சாராய நெடியும் உள்ளே இருக்கிற இறைவனை திக்குமுக்காடச் செய்யும் அல்லவா?

நமக்குள்ளே கர்த்தர் வாசம்பண்ணுகிறாரென்றால் அது எத்தனை ஆச்சரியமான காரியம்! சரீரம் வியாதிப்பட்டுவிடக்கூடியது. பயங்கர விபத்து ஏற்படுமானால் நொறுங்கிப்போய்விடக்கூடியது. எதிர்பாராத நேரத்தில் மரணத்தைச் சந்திக்கக்கூடியது. ஆனால் கர்த்தரோ நம்மையே அவருடைய வாசஸ்தலமாய் தெரிந்துகொண்டார். அநித்தியமான நம்மை நித்தியமானவர்களாக்குவதற்கு, மண்ணான சரீரத்தை மகிமையில் மறுரூபமாக்குவற்குத் தெரிந்துகொண்டார். தேவபிள்ளைகளே, நீங்களே அவருடைய ஆலயமாயிருக்கிறீர்கள்.

நினைவிற்கு:- “திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர். உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது” (சங். 93:4,5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.