Appam, Appam - Tamil

ஜூலை 15 – அடித்துப் புசி!

“பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று…. தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று (அப். 10:13-15).

அப். பேதுரு ஞானதிருஷ்டியடைந்தபோது, மூன்றுமுறை வானத்திலிருந்து சத்தம் உண்டாகி பேதுருவோடு பேசியது. முதல்முறை அந்த சத்தம், அடித்துப் புசி என்று சொன்னது. இரண்டாவது அந்த சத்தம், தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று சொன்னது. மூன்றாம் தரமும் அப்படியே உண்டாயிற்று.

அப். 10-ம் அதிகாரத்திலிருந்து, கர்த்தர் தமது சுவிசேஷத்தை புற ஜாதியாருக்கும் கொண்டுசெல்லுகிறதைப் பார்க்கிறோம். இஸ்ரவேலர், புறஜாதியாரைக் கீழாக மதித்தார்கள். தீட்டாக எண்ணினார்கள். ஆனால் கர்த்தருடைய சுவிசேஷம் சகல சிருஷ்டிக்கும் அறிவிக்கப்படவேண்டிய ஒன்றாயிருந்தது. சீஷர்கள் உலகமெங்கும்போய் சர்வ சிருஷ்டிக்கும் அறிவிக்க வேண்டிய தேவ கட்டளைகளைப் பெற்றார்கள். இப்பொழுது வானத்திலிருந்து உண்டான சத்தத்தால், கர்த்தர் இஸ்ரவேலருக்கும், புறஜாதியாருக்கும் நடுவே நின்ற பிரிவினை என்ற தடுப்புச் சுவரைத் தகர்த்தார். கர்த்தர் அசுத்தமானதை சுத்தமாக்குகிறவர். அவர் சுத்தமாக்கினதை ஒருபோதும் தீட்டாக எண்ணவே கூடாது.

கர்த்தர், ஒருவிசை இந்த பூமியிலே வாழுவதற்கு நமக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்த வாய்ப்பிலே மேல்ஜாதி, கீழ்ஜாதி, தீண்டக்கூடியவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்கக்கூடாது. பேதுருவுக்கு அதை உணர்த்தும்படி வானத்திலிருந்து பேசினார். நீ புறஜாதியார் என்றும், புறதேசத்தான் என்றும், ஆணென்றும், பெண்ணென்றும் பாராதே. கிரேக்கனென்றும், யூதனென்றும் பாராதே. மொழி வித்தியாசம் என்றும், இன வித்தியாசமென்றும் பாராதே. பரலோகம் எல்லோருக்கும் உரியதாயிருக்கிறது. இயேசு கிறிஸ்து உலகத்திலுள்ள சகல மனுஷருக்காகவும், இரத்தம் சிந்தியிருக்கிறார். ஆகவே புறஜாதியாருக்கும் பரலோகம் சொந்தமானது என்பதை எடுத்துச்சொன்னார்.

கர்த்தராகிய இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தார். யாரெல்லாம் தங்களைப் பாவிகள் என்று ஒப்புக்கொள்ளுகிறார்களோ, அவர்கள் யாராக இருந்தாலும், எந்த ஜாதி மதமாயிருந்தாலும் அவர்களை இரட்சிக்க, கர்த்தர் உண்மையுள்ளவராயிருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே, தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்” (சங். 62:9).

நான் உயர்ந்த ஜாதி என்று ஒருவன் மேன்மை பாராட்டினால், அவன் பொய்யாக இருக்கிறான். தங்களைக் கீழ்ஜாதி என்று தாழ்த்திக்கொள்ளுகிறவர்கள் மாயையாக இருக்கிறார்கள். இரண்டுபேரையும் தராசில் வைத்து நிறுத்திப் பார்க்கும்போது, அங்கே அவர்கள் மாயையிலும் லேசானவர்களாய் காணப்படுவார்கள்.

கிறிஸ்தவ மார்க்கத்தில் திருமணம் செய்விக்கும்போது சிலர் ஜாதி வித்தியாசங்களைப் பார்க்கிறார்கள். அது பரலோகத்துக்கு விரோதமான செயல் அல்லவா? கர்த்தருக்கு முன்பாக இருப்பது பரிசுத்த ஜாதி ஒன்றே. தேவபிள்ளைகளே, நீங்கள் அந்த பரிசுத்தக் கூட்டத்திலே ஒருவராக கட்டாயம் காணப்படவேண்டும் அல்லவா?

நினைவிற்கு:- “சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்” (ஏசா. 26:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.