Appam, Appam - Tamil

ஜூன் 25 – எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார்?

“எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும் (சங். 4:6).

எங்களுக்கு நன்மை காண்பிக்கிறவன் யார் என்பதே இன்றைய மனுக்குலத்தின் கூக்குரலாகத் தொனிக்கிறது. எங்களுக்கு ஒரு நன்மை இல்லையே, எங்களுக்கு ஒரு உயர்வு இல்லையே என்று இருளிலே புழுக்களைப்போல துடித்துக் கதறும் கூக்குரல்கள் பரலோகத்தை எட்டுகிறது. அதற்குப் பரலோகம் கொடுக்கும் மறுமொழி யேகோவாயீரே என்பதுதான்.

ஆபிரகாம் ஆண்டவரை விசுவாசித்தவர். ஆண்டவருக்காக எதையும் தியாகமாக செய்ய முன்வந்தவர். தன் மகனுக்குப்பதிலாக பலிசெலுத்தும்படி ஒரு ஆடு இல்லையே என்று கர்த்தருடைய பர்வதத்தில் சுற்றிப்பார்த்தபோது, தனக்கு நன்மை காண்பிக்கிற யேகோவாயீரே தனக்காக ஒரு ஆட்டுக்குட்டியை ஏற்படுத்தியிருந்ததைக் கண்டார்.

அந்த ஆட்டுக்குட்டியின் தலை முட்களிலே சிக்கி இருந்தது. அந்த ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு வந்து தன் மகனைக் கிடத்தியிருந்த அதே பலிபீடத்தின்மேல் கிடத்தி தேவனுக்கென்று பலியிட்டார்.

கர்த்தர் ஆச்சரியமாய் நம்முடைய தேவைகளை அருளிச்செய்கிறார். நன்றியுள்ள இருதயத்தோடு ஆபிரகாம், தன் தேவையை சந்தித்த கர்த்தரை நோக்கி யேகோவாயீரே என்று சத்தமிட்டார். யேகோவாயீரே என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று எனக்காக யாவையும் செய்துமுடிக்கிற யேகோவா என்பது. அடுத்தது, கர்த்தருடைய பர்வதத்தில் என் தேவையைச் சந்திக்கிறவர் என்பதாகும்.

எங்களுக்கு நன்மை காண்பிப்பவர் யார் என்று நீங்கள் வேதனைப்பட்டு கலங்கிக்கொண்டிராமல், யேகோவா தேவனே, யேகோவாயீரே, எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே என்று சொல்லி அவரை நோக்கிக் கூப்பிடும்போது, தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி. 4:19).

ஆபிரகாம் நினைத்ததும் வேண்டிக்கொண்டதும் ஒரு குழந்தைதான். ஆனால் கர்த்தரோ ஒரு பெரிய விசுவாச சந்ததியையே ஆபிரகாம்மூலமாய் கொடுக்கச் சித்தமானார். ஆபிரகாமுக்கு 99 வயது மற்றும் சாராளுக்கு 89 வயது என்பதால் இனிமேல் எங்களுக்கு குழந்தை பிறக்குமா, எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று அவர்கள் கதறியிருக்கக்கூடும்.

ஆனால் யேகோவாயீரே அவர்களுக்கு விசுவாச சந்ததியைக் கொடுக்கச் சித்தமானார். வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் கர்த்தர் ஆபிரகாமின் சந்ததியை பெருகப்பண்ணினார். அவரை யேகோவா என்றும், யேகோவாயீரே என்றும் அன்போடு அழைப்பது எவ்வளவு பொருத்தமானது!

“உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்” (ஆதி. 17:6) என்று ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணின கர்த்தர் உண்மையுள்ளவர்.

தேவபிள்ளைகளே, ஆபிரகாமை ஆசீர்வதித்த கர்த்தர், உங்களையும் அப்படியே ஆசீர்வதிக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார்.

நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே.1:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.