செப்டம்பர் 03 – சப்பாணிக்குக் கால்கள்!
“லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான்” (அப். 14:8,9).
லீஸ்திரா என்ற ஒரு ஊரில் சப்பாணியான ஒரு மனிதனை அப். பவுல் கண்டார். அந்த மனிதனுக்கு இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் உண்டென்று கண்டு, எழுந்து காலை ஊன்றி நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னார். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
வேதத்திலே எழுத்தின்படியான அற்புதங்களும் உண்டு. ஆவிக்குரிய அற்புதங்களும் உண்டு. இன்றைக்கும் கர்த்தர் சப்பாணிகளை எழுந்து நடக்கப்பண்ணுகிறார். அதே நேரம், ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேற முடியாதபடி இருந்த இடத்திலேயே இருந்துகொண்டிருக்கும் சப்பாணிகளையும் ஆண்டவர் குணமாக்கி, சுவிசேஷத்தை அறிவிக்கும்படிச் செய்கிறார்.
எழுத்தின்படியாகவும் குருடர் பார்வையடைகிறார்கள். அதேநேரம், அவனுடைய ஆன்மீக கண்கள் திறக்கப்படும்போது, அது இன்னும் பெரிய ஆசீர்வாதமாயிருக்கிறது. “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்” (சங். 119:18) என்று தாவீது ஜெபித்தார். அவர் வேண்டிக்கொள்வதெல்லாம் ஆன்மீக கண்களின் பார்வையாகும்.
தேவசித்தத்தை அறியும்படியாகவும், கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கும்படியாகவும் அநேகருடைய ஆவிக்குரிய செவிட்டுக் காதுகளை கர்த்தர் திறந்திருக்கிறார். ஆம், உங்களுடைய ஆவிக்குரிய செவிகளும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு, திறக்கப்படவேண்டும்.
கர்த்தரைக்குறித்து சாட்சி சொல்ல வெட்கப்படுகிற ஊமையரான கிறிஸ்தவர்கள் உண்டு. கர்த்தரை ஆவியோடும், உண்மையோடும் ஆராதித்துப் பாடி, மகிழ முடியாத ஊமையரும் உண்டு. ஆனால் கர்த்தர் அற்புதம் செய்யும்போது, அவர்களுடைய வாயின் கட்டுகள் அறுக்கப்படுகிறது. கர்த்தரை துதித்துப்பாடி ஊழியம் செய்கிறவர்களாய் அவர்கள் மாறுகிறார்கள்.
யோபு சொல்லுகிறார், “நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்” (யோபு 29:15). மகா துயரத்தின் பாதையில் சென்றவர்தான் யோபு. ஆனாலும் அவர் குருடருக்குக் கண்ணாய் இருந்தேன் என்றும், சப்பாணிக்குக் காலாய் இருந்தேன் என்றும் சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் மற்றவர்களுக்கு உதவியாய் இருங்கள். ஆறுதலாய் இருங்கள். ஆலயத்திற்கு வர முடியாத சப்பாணிகளை ஆராதனைக்கு தூக்கிக்கொண்டு வாருங்கள். உங்களோடு இணைந்து கர்த்தரை ஆராதிக்க அவர்களுக்கு உதவுங்கள்.
இயேசுவின் நாட்களில் நான்குபேர் சேர்ந்து, சப்பாணிபோல இருந்த, ஒரு திமிர்வாதக்காரனை கர்த்தரிடத்திலே தூக்கிக்கொண்டு வந்தார்கள். கூட்டம் மிக அதிகமாய் இருந்தபடியால் வாசல் வழியாய் கொண்டுவர முடியாமல், வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே இறக்கினார்கள். கர்த்தர் அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை சொஸ்தமாக்கினார். தேவபிள்ளைகளே, “கர்த்தாவே, எழுத்தின்படியான சப்பாணிகளையும் நடக்கப்பண்ணும், ஆவிக்குரிய பிரகாரமான சப்பாணிகளையும் நடக்கப்பண்ணும்” என்று ஜெபிப்போமாக.
நினைவிற்கு:- “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று” (சங்.122:1,2).