செப்டம்பர் 02 – கால்களை காண்கிறார்!
“அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்” (யாத்.3:5).
கர்த்தர் உங்கள் கால்களைக் காண்கிறார். கால்களுக்கு பாதரட்சை மிகவும் அவசியம். எகிப்திலே பஸ்கா புசிக்கும்போது, கால்களிலே பாதரட்சை அணிந்தவர்களாய்ப் புசிக்கவேண்டுமென்று கர்த்தரே சொன்னார் (யாத். 12:11). பாதரட்சை அணிந்த பாதங்கள், ஆயத்தத்தை வெளிப்படுத்துகிறது (எபே. 6:15). கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை நாற்பது வருடங்கள் வனாந்தரத்திலே வழிநடத்திக் கொண்டுவந்தபோது, அவர்களுடைய பாதரட்சைகள் பழையதாகிப் போகவில்லை (உபா. 29:5).
அதேநேரம், கர்த்தருடைய சமுகத்திற்கு வரும்போது, கர்த்தர் பயபக்திக்குரியவர் என்பதை உணர்ந்து, அவருடைய சமுகத்தில் தாழ்த்தி, பாதரட்சைகளைக் கழற்ற வேண்டுமென்று அவர் விரும்புகிறார். பொதுவாக, பாதரட்சைகள் செத்த மிருகத்தின் தோலால் செய்யப்பட்டவை. செத்ததைத் தொடுகிறவன் தீட்டுப்பட்டவன் என்று கர்த்தருடைய பிரமாணம் சொல்லுகிறது. தேவ சமுகத்தில் நிற்கும்போது, அப்படிப்பட்ட பாதரட்சையோடு நிற்கக்கூடாது.
இந்தியாவிலும், இலங்கையிலும், மற்ற கிழக்கத்திய தேசங்களிலும் ஒருநாளும் காலணியை அணிந்துகொண்டு ஆலயத்திற்குள் வரமாட்டார்கள். அது பரிசுத்த இடம் என்பதே அதன் காரணம். அதை நாம் தீட்டுப்படுத்தக்கூடாது. மட்டுமல்ல, நமது தேசத்தில், பெரியவர்களையும், செல்வந்தர்களையும் பார்க்கச்செல்லும்போது காலணியைக் கழற்றிவிட்டுப்போவார்கள். சிலர், கழற்றிக் கையில் எடுத்து மறைத்துக்கொண்டு போவார்கள். எஜமானுக்கு முன்பு அடிமையானவன் ஒருநாளும் செருப்பு அணியமாட்டான்.
கெட்ட குமாரன் தகப்பனைப் பார்க்க வந்தபோது, கால்களிலே செருப்பு இல்லாமல் வந்தான். பன்றி மேய்க்கிறவன் செருப்பு அணிய முடியாது. வறுமையினிமித்தம், அவனுக்கு காலணிகூட இல்லாமல் இருந்திருக்கலாம். தகப்பன் மகனைக் கண்டவுடனே, அவனுடைய உள்ளம் உருகிவிட்டது. “தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்” (லூக். 15:22) என்றான்.
நாம், சுயம் என்னும் பாதரட்சையைக் கழற்றி எறிந்துவிட்டு, தேவ சித்தம் என்னும் பாதரட்சையை அணிந்துகொள்ளவேண்டும். ஒருவர் சுயத்தோடு தேவசமுகத்திற்கு வர முடியாது. சுயநலம், சுயசித்தத்தை கர்த்தர் வெறுக்கிறார். தேவசமுகத்தில் தாழ்மையை அணிந்தவர்களாய் வருவோமென்றால், கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுவோம். உங்கள் பார்வைக்கு ஞானியைப்போல, நீங்கள் வரவேண்டாம். ஞானிகளை வெட்கப்படுத்தும்படி, பேதைகளைத்தான் கர்த்தர் அழைக்கிறார். பலவான்களை வெட்கப்படுத்தும்படி, பலவீனமானவைகளைதான் அவர் தெரிந்துகொண்டார். உங்கள் அந்தஸ்து, மேன்மை, பெருமைகளையெல்லாம் தேவசமுகத்தில் கழற்றி, அகற்றிவிடுவீர்களாக.
உசியா இராஜா, தூபம் காட்ட பரிசுத்த ஸ்தலத்திற்கு போகும்போது, தான் ஒரு பெரிய இராஜா என்ற மேட்டிமையோடு உள்ளே சென்றான். அங்கே கர்த்தர் அவனை அடித்ததினால், அவன் குஷ்டரோகியாய் இருக்கவேண்டியதாயிற்று. தேவபிள்ளைகளே, எப்போதும் தாழ்மையை தரித்துக் கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்” (சங்.119:59).