Appam, Appam - Tamil

ஆகஸ்டு 21 – பொத்தலான பை!

“நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான் (ஆகா. 1:6).

தீர்க்கதரிசியாகிய ஆகாய் பல கூட்டத்தாரை நம் மனக்கண்களுக்கு முன்பாகக் கொண்டுவருகிறார். முதலாவது அவர் ஒரு விவசாயியை முன்வைக்கிறார். அந்த விவசாயி அதிகமாக விதைத்தும் பலன் கிடைக்கவில்லை. மிகவும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறார். ஏன் அவரது நிலம் மற்றவர்களுடையதைப்போல முப்பது, அறுபது, நூறாகப் பலன் தரவில்லை? ஏன் அவரது பை பொத்தலாயிருக்கிறது?

இன்னொரு கூட்டத்தாரையும் அவர் நம் மனக்கண்களுக்கு முன்பாக நிறுத்துகிறார். அவர்களிடம் பணம் இருக்கிறது. எவ்வளவுதான் புசித்தாலும் அவர்களுக்குப் பசி குறைவதில்லை. வயிற்றிலே ஏதோ ஒரு தீய ஆவி குடியிருந்துகொண்டு பசியை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது. அவர்களுடைய ஆத்துமாவிலே நிம்மதியும், சமாதானமும் இல்லை. இவர்கள் வைத்திருப்பதும் ஒரு பொத்தலான பையே.

இன்னொரு கூட்டத்தையும் அவர் நம்முன் நிறுத்துகிறார். அவர்கள் எத்தனையோ வஸ்திரங்கள் உடுத்தியிருந்தும், கம்பளி போர்த்தியிருந்தும் அவர்களது குளிர் குறையவேயில்லை. சரீரம் நடுங்கிக்கொண்டேதான் இருக்கிறது. இதுவும் ஒருவகை பொத்தலான பையே.

ஆகாய் தீர்க்கதரிசி சொல்லுகிறார், கர்த்தருடைய வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சு பாவப்பட்ட வீடுகளில் குடியிருக்கிறீர்கள். உங்கள் செயல்கள்தான் அந்தப் பைகளிலே பொத்தலை உண்டாக்கியிருக்கிறது. பொத்தலான பையில் செல்வம் நிற்பதில்லை. பொத்தலான வலையில் மீன்கள் தங்குவதில்லை. இடிந்து கிடக்கிற பலிபீடத்தில் அக்கினி இறங்குவதில்லை. ஆலயத்தை அலட்சியம் செய்கிறவர்களின் வாழ்க்கையில் ஆசீர்வாதம் இருப்பதில்லை.

நீங்கள் கர்த்தரைக் கனம்பண்ணும்போது, அவர் உங்களைக் கனம்பண்ணுவார். கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அவர் உங்களை மகா மேன்மையான நிலைமையில் வைப்பார். கர்த்தருடைய ஆலயத்திற்கு உங்கள் தசமபாகத்தைக் கொண்டுவரும்போது, வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவார் (மல். 3:10). “உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்” (நீதி. 3:9,10).

தேவபிள்ளைகளே, ‘முதலாவது கர்த்தருக்கு’ என்பதை ஆணித்தரமாக உங்களுடைய உள்ளத்தின் பலகையில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கர்த்தரை உள்ளன்போடு நேசிக்கும்போது மனப்பூர்வமாக உங்களுக்கு கிடைக்கும் எல்லாவற்றிலும் கர்த்தருக்கு முதல்பங்கைக் கொடுத்து அவரை சந்தோஷப்படுத்துவீர்களா? அப்போது அவர் உங்களை சந்தோஷப்படுத்துவார். தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே, உங்களுடைய குறைவுகளையெல்லாம் நிறைவாக்குவார். உங்கள் பாத்திரம் எப்போதும் நிரம்பி வழிந்துகொண்டே இருக்கும்.

நினைவிற்கு:- “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்” (மத். 6:33).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.