Appam, Appam - Tamil

அக்டோபர் 05 – கர்த்தருடைய ராஜரீகம்!

“கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது” (சங். 103:19).

இன்றைக்கு உலக ஆட்சி யார் கையில் இருந்தாலும் சரி, பரலோக சிங்காசனம் நம் கர்த்தரிடமே உள்ளது. அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது. அவர் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமுடையவராய் இருக்கிறார் (மத். 28:18).

அவர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தாவாக இருக்கிறார் (வெளி. 19:16). உன்னதமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர், சர்வத்தையும் ஆளுகிறவர். மட்டுமல்ல, நமக்காக பரிந்து பேசுகிற பிரதான ஆசாரியனாகவும் இருக்கிறார். அவரே உங்களுக்கு நீதி செய்யும் சர்வலோக நியாயாதிபதியானவர்.

ஏசாயா காலத்தில் உசியா என்கிற இராஜா மிகுந்த மனமேட்டிமையோடு அரசாண்டு வந்தார். தனது ஆளுகையில் தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற தைரியத்தில் பலிசெலுத்தப்போனார். ஆசாரியர்கள் எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. மாறாக ஆசாரியர்கள்மேல் அவருக்குக் கோபம் வந்தது. உடனே கர்த்தருடைய தூதன் உசியா இராஜாவை அடித்ததினால் அவன் மரணமடையுமட்டும் குஷ்டரோகியாய் இருக்கவேண்டியதாயிற்று.

உசியா ராஜா மரணமடைந்தபோது, கர்த்தர் ஏசாயாவின் கண்களைத் திறந்தருளினார். ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதை ஏசாயா தீர்க்கதரிசி கண்டார். எத்தனை அருமையான காட்சி! உலகத்தில் இராஜாக்கள் வரலாம். இராஜாக்கள் கடந்தும் போகலாம். ஆட்சிகள் மாறலாம். கர்த்தரோ, “ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்” (தானி. 2:21). அவர் மாறாதவராய் என்றென்றைக்கும் நித்திய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். அவருடைய அரசாட்சிக்கு முடிவே இல்லை. அவரே ஆதியும் அந்தமுமானவர்.

நீங்கள் அரசாங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, பல மேல் அதிகாரிகள் மாறி மாறி வந்திருக்கலாம். அதில் சிலர் மிக மிகக் கடுமையாக நடந்துகொள்ளுபவர்களாக இருக்கலாம். சிலர் காரணமேயில்லாமல் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறவர்களாயிருக்கலாம். மற்றவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து, தடைசெய்துகொண்டிருப்பவர்களாக இருக்கலாம். ஆனாலும் உங்கள் கண்கள் கர்த்தரையே நோக்கிக்கொண்டிருக்கட்டும்.

தாவீது சொல்லுகிறார், “எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது” (சங். 123:2). சில நேரங்களில் பதில் வருவதற்குக் காலதாமதமாவதைப்போலத் தோன்றினாலும் நிச்சயமாய் அவர் நீதி செய்து நல்ல பலனை உங்களுக்குக் கட்டளையிடுவார். காரணம், அவர் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர்.

“ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்” (எரே. 51:46). இஸ்ரவேலின்மேல் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் ஆளுகை வந்தது. பாபிலோனிய சாம்ராஜ்யத்தை முறியடித்துவிட்டு மேதிய பெர்சிய சாம்ராஜ்யங்களின் ஆட்சி வந்தது. அந்த ஆட்சியை முறியடித்துவிட்டு கிரேக்கர்கள் அரசாள வந்தார்கள். கிரேக்கர்கள்மேல் ரோமர்கள் அரசாள வந்தார்கள். இப்படித்தான் இந்தியாவையும் அநேக இராஜாக்கள் அரசாண்டனர். ஆனால் கர்த்தரோ இராஜாதி இராஜாவாய் இன்றைக்கும் அரசாட்சி செய்கிறார். அவரே நம்முடைய இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா. அவரே வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமுள்ளவர்.

நினைவிற்கு:- “அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது” (லூக். 1:33).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.