Appam, Appam - Tamil

ஆகஸ்டு 11 – உயர்ந்த இடத்தில்!

“கழுகு கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும். அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும் (யோபு 39:28,29).

எந்த பறவையும் பறக்க முடியாத உயரத்தில் கழுகுகள் மிக அழகாகப் பறக்கின்றன. அதுபோலவே, இரட்சிக்கப்பட்டவனது ஆத்துமா உலகத்தின் ஈர்ப்பு சக்திகளைத் தாண்டி, சிற்றின்பங்களை வெறுத்து, மேலானவைகளை நாடுகிறது. அந்த ஆத்துமா செட்டைகளை அடித்து எழும்பி, உன்னதங்களிலே உன்னதராகிய கிறிஸ்துவோடுகூட பறந்து செல்லுகின்றன.

அப். பவுல் விசுவாசிகளுக்கு எழுதும்போது, “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், …. பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்” (கொலோ. 3:1,2) என்று எழுதுகிறார். மேலானவைகளையே நீங்கள் நாடவேண்டும். மேலானவைகளையே எதிர்நோக்கவேண்டும். மேலான ஸ்தலங்களிலேயே கர்த்தரோடுகூட உலாவவேண்டும். இதுவே உங்களுக்கான அழைப்பு.

நீங்கள் மண்ணுக்குரிய சரீரம் உடையவர்களாயிருந்தாலும்கூட, உங்களுக்குள்ளே அழியாத நித்திய ஆத்துமா உண்டு. மகிமையின்மேல் மகிமை அடையும் எதிர்பார்ப்பு உண்டு. அந்த ஆத்துமா நித்தியமாகிய பரலோக இராஜ்யத்தை ஒருநாள் சுதந்தரித்துக்கொள்ளும். ஆகவே, நீங்கள் உத்தமனாக, பரிசுத்தவானாக, கர்த்தருக்குப் பிரியமானவனாக வாழ அழைக்கப்படுகிறீர்கள். கழுகு ஒருபோதும் அற்பமான இடங்களில் வாழ்வதில்லை. குப்பை மேடுகளை கிளறுவதில்லை. அது உன்னத ஸ்தானங்களையே வாஞ்சிக்கிறது. அப்படியே உங்களுடைய நோக்கங்கள், எண்ணங்கள், சிந்தைகள் எல்லாம் உன்னதத்தைப்பற்றினதாகவே இருக்கட்டும்.

உங்கள் நோக்கமும், சிந்தனையும் இம்மைக்குரியதாய் இருக்கிறதா அல்லது நித்தியத்திற்குரியதாய் இருக்கிறதா? இன்னும் அநேகர் திருமண நேரங்களில் ஜாதி வித்தியாசத்தையும், நாளையும், நேரத்தையும், நட்சத்திரத்தையும் பார்த்துக்கொண்டு திரிகிறார்கள். பின்னர், மிகச்சிறிய காரியங்களுக்காகக்கூட தேவஅன்பு இல்லாமல் கடுமையாக சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

வேறு சிலர் குறுகிய எல்லைக்குள் நின்றுகொண்டு பரிசேயர், சதுசேயரைப்போல மற்றவர்களைக் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள். கர்த்தரோ உன்னதங்களுக்கு உங்களை அழைக்கிறார். “லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே!” என்று கூப்பிடுகிறார் (உன். 4:8).

மனிதன் விமானத்தில் உயர உயரச் சென்றுகொண்டிருக்கும்போது கீழே பார்த்துக்கொண்டிருக்கும்போதே தரையிலுள்ள வீடு, கட்டிடம், நிலம், ஆஸ்தி எல்லாம் மிகமிகச் சிறிதாகி, முடிவில் மறைந்துவிடுகின்றன. உலகத்தின் மேன்மையெல்லாம் ஒன்றுமில்லை என்பதையும், மனிதன் மாயையாகவே அலைந்து திரிகிறான் என்பதையும் அவன் அப்பொழுது புரிந்துகொள்ளுகிறான்.

அப்படியே ஆவிக்குரிய ஜீவியத்தில் உயர உயரச் செல்லுகிற பரிசுத்தவான்களுக்கு உலக நேசம், பாசங்கள் எல்லாம் அற்பமாய் மறைந்துபோகின்றன. அதின்மேல் எந்த பற்றும் இருப்பதில்லை. இரட்சிக்கப்படுவதற்கு முன்பு மேன்மையாய்த் தெரிந்தவைகள் இரட்சிக்கப்பட்டபின் அற்பமும் குப்பையுமாய்க் காணப்படுகின்றன.

தேவபிள்ளைகளே, கிறிஸ்துவினுடைய பூரணமும், கிறிஸ்துவினுடைய சுதந்தரமும், நித்திய இராஜ்யமுமே உங்களுடைய வாஞ்சையும், நோக்கமுமாய் இருக்கட்டும்.

நினைவிற்கு:- “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்” (வெளி. 21:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6