Appam, Appam - Tamil

ஆகஸ்டு 07 – ஞானமுள்ளவர்!

“கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?” (1 சாமு. 2:3).

அன்னாளின் களிகூருதலைக்குறித்து 1 சாமு. 2-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். முதலில் கர்த்தருடைய பரிசுத்த அழகைப் புகழ்ந்த அன்னாள், இரண்டாவதாக, கர்த்தருடைய ஞானத்தைப் புகழ்ந்து போற்றினாள். கர்த்தருடைய பரிசுத்தத்தைப் புகழப்புகழ உங்களுக்குள் பரிசுத்தம் வரும். கர்த்தருடைய ஞானத்தைப் புகழப்புகழ நீங்கள் ஞானத்தில் சிறந்து விளங்குவீர்கள்.

தேவஞானம் என்பது என்ன? பலவான்களின் வில்லை முறிக்க அவர் ஞானமுள்ளவர். தள்ளுண்டவர்களை பலத்தினால் இடைக்கட்ட அவர் ஞானமுள்ளவர். மலடியாய் இருந்தவள் ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுக்கும்படி கிருபை பாராட்டுகிறவர். இந்த உலகத்தில் பிரபஞ்சத்திற்குரிய ஞானமும் உண்டு. மனிதனுக்கான இயற்கையான ஞானமும் உண்டு. பிசாசுக்கு தந்திரமான தீய ஞானம் உண்டு. கர்த்தருடைய ஞானமோ அளவிடப்பட முடியாதது. ஞானத்தில் குறைவுள்ளவர்களுக்கு அவர் ஞானத்தை தருகிறார் (யாக். 1:5). “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதி.1:7).

கோலியாத்தை வெல்ல சவுலுக்கு யுத்த ஞானம் இல்லை. தாவீது முன்வந்தபோது, தாவீதையும் அதைரியப்படுத்தினார். தேவனுடைய எண்ணத்தையே உங்கள் சிந்தையாய் மாற்றிக்கொள்ளும்போதுதான், தேவஞானம் விளங்கும். அந்த தேவஞானத்தாலும், பக்தி வைராக்கியத்தாலும் தாவீது எளிதாக கோலியாத்தை வீழ்த்தினார்.

கர்த்தருடைய ஞானம் எல்லா ஞானத்திலும் மேற்பட்ட பரமஞானமாக இருக்கிறது. ஞானத்தைக் கர்த்தரிடத்தில் கேளுங்கள். ஞானத்தை அருளுகிற ஆவியினால் நிரப்பப்படுங்கள். ஞானத்தை தெரிவிக்கிற வசனம் என்ற உன்னதமான ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

எகிப்து தேசத்துக்கு ஒரு ஞானவான் தேவைப்பட்டான். அங்கே வரப்போகிற ஏழு பஞ்ச வருஷங்களை எதிர்கொள்ளத்தக்க ஒரு ஞானமுள்ள மனுஷன் தேவைப்பட்டான். பார்வோன் யோசேப்பையே அந்த ஞானமுள்ள மனுஷனாகத் தெரிந்துகொண்டான். “தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியினால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை” (ஆதி. 41:39) என்று அவன் சொன்னான். இதனால் யோசேப்பு பார்வோனுக்குப் பிரதம மந்திரியானார்.

நீங்கள் கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவர் பேதமைகளை ஞானியாக்குகிறவர். சிறுசிறு காரியம் செய்வதற்கும்கூட உங்களுக்கு ஞானம் தேவை. அனுதின வாழ்க்கையில் மற்றவர்களோடு பேசவும், பழகவும் உங்களுக்கு ஞானம் தேவை. கர்த்தர் தம்முடைய ஞானத்தை உங்களுடைய நாவில் அருளிச்செய்வார். அப்பொழுது பேசுகிறவர் நீங்களாயிராமல் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறார் என்பதை அறிந்துகொள்வீர்கள் (மத். 10:20). தேவபிள்ளைகளே, இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்.

வேதம் சொல்லுகிறது, “…ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்” (உபா. 4:6).

நினைவிற்கு:- “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது” (யாக். 3:17)

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6