அக்டோபர் 21 – ஏன் கலங்குகிறீர்கள்!
“நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?” (லூக். 24:38).
கலங்கின உள்ளங்களுக்கு ஆறுதல் தரும் ஒரு வேதபகுதி யோவான் 14-ம் அதிகாரமாகும். உள்ளத்தில் கலக்கம் வருவது இயற்கைதான். பிரச்சனைகளும், போராட்டங்களும் அலைமோதுவதும்கூட இயற்கைதான். அந்த நேரத்தில் கலங்கி சோர்ந்துபோய் இருந்துவிடக்கூடாது. கலக்கத்தின் ஆவியை அகற்றி, உற்சாகத்தின் ஆவியைத் தரித்துக்கொள்ளவேண்டும்.
கர்த்தர் உங்களுடைய மேய்ப்பராய் இருப்பாரானால், நீங்கள் கலங்கவேண்டிய அவசியமில்லை. அவர் ஒருநாளும் தன் ஆடுகளை கலங்கின தண்ணீருக்கு அழைத்துக்கொண்டு போகமாட்டார். அமர்ந்த சமாதானமான தண்ணீர்களண்டை கொண்டுபோய்விடுகிறார். அலைமோதும் இந்த உலகிலே, எந்த ஆத்துமா கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளுகிறதோ, அது அசையாமல் நிலைத்திருக்கும், சீயோன் பர்வதத்தைப்போல இருக்கும்.
ஆகவே கலக்கம் வரும் நேரங்களிலெல்லாம், கர்த்தரை நோக்கிப்பாருங்கள். அவருடைய வார்த்தைகளை விசுவாச அறிக்கை செய்யுங்கள். கர்த்தர்மேல் தன் பாரத்தை வைத்துவிட்டவன் ஒருநாளும் கலங்கப்போவதில்லை (சங். 55:22).
“பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்” (சங். 46:2,3) என்று தாவீது தன் அனுபவத்தைச் சொல்லுகிறார்.
எப்படி அவருடைய உள்ளம் பயப்படாமலும் கலங்காமலும் இருந்தது? முதலாம் வசனம் சொல்லுகிறது, “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங். 46:1) ஆம், நீங்களும் இந்த சத்தியத்தை உறுதியாய்ப்பற்றிப் பிடித்துக்கொள்வீர்களானால் கலங்க வேண்டியதில்லை, பயப்படவேண்டிய அவசியமில்லை.
இந்தியாவின் பிரதமராய் இருந்த இந்திராகாந்தி, தன் மகனாகிய சஞ்சய் காந்தியை விமான விபத்திலே பறிகொடுத்தபோது அவர்கள் திரும்பத்திரும்ப மலைப் பிரசங்கத்தையும், யோவான் 14ம் அதிகாரத்தையும் அடுத்தடுத்து வாசித்தார். “அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதலாய் இருந்தது” என்று ஒருமுறை குறிப்பிட்டார்.
இயேசு மூன்றரை ஆண்டு காலம் சீஷர்களோடு தங்கி, முடிவாக சிலுவையை சந்திக்கும் முன்னால் சீஷர்களைத் தேற்றும்படி விரும்பினார். தன்னுடைய பிரிவைக்குறித்து சீஷர்கள் கலங்கவேண்டியதில்லை என்பதை இயேசுவானவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். “நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சகாலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்” (யோவா. 16:16).
ஒருபக்கம் இயேசு சீஷர்களின் கலக்கத்தையும், மனவேதனையையும் அறிந்திருந்தார். மறுபக்கம் மறுநாளிலே தாம் அனுபவிக்கப்போகும் அவமானமான வேதனை நிறைந்த பாடு மரணத்தையும் அறிந்திருந்தார்.
இயேசு தானே கலங்கின நிலையில் இருந்தாலும், கலங்கின சீஷர்களை ஆறுதல்படுத்தின அவருடைய அன்பு எத்தனை மேன்மையானது! தேவபிள்ளைகளே, அவருடைய அன்பின் கரங்களே உங்களை ஆறுதல்படுத்தும்.
நினைவிற்கு:- “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).