ஜனவரி 23 – பூரணமான வரங்கள்!
“பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது” (யாக். 1:17).
கிறிஸ்துவானவர் தம்முடைய பிள்ளைகளுக்காகவே ஆவியின் வரங்களை வைத்திருக்கிறார். நீங்கள் ஜெபத்தினாலும், விசுவாசத்தினாலும் தேவனிடமிருந்து வரங்களைப் பெற்றுப் பூரணமடைய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
கர்த்தர் எனக்கும்கூட வரங்களைத் தந்தருளுவாரா என்றும், நான் அதற்கு தகுதியுள்ளவனா என்றும், ஒருவேளை நீங்கள் கேட்கலாம். வேதம் சொல்லுகிறது, “தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்” (சங். 68:18). “அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்” (எபேசியர் 4:8) என்று வேதம் சொல்லுகிறது.
பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களுக்கு வரங்கள் அபூர்வமாக இருந்தன. ஆனால், புதிய ஏற்பாட்டில் சீஷர்கள் பெந்தெகொஸ்தே நாளில் மேல் வீட்டறையில் ஜெபத்தோடு காத்திருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார். ஒவ்வொருவரும் ஆவியின் வரங்களைப் பெற்றுக்கொண்டார்கள் (அப். 2:4).
நீங்கள் ஆவியின் வரங்களினால், கர்த்தர் ஜீவனுள்ளவர் என்பதை நிரூபிக்கிறீர்கள். புறஜாதியாரை வாக்கினாலும் வல்லமையினாலும் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியப்பண்ணுகிறீர்கள். தீர்க்கதரிசனங்கள் மூலம் வருங்காலங்களை அறிகிறீர்கள். ஆவியின் வரங்களினால் அற்புதங்கள் நிகழ்கின்றன.
அப். பவுல் சொல்கிறார், “அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்” (1 கொரி. 14:1). வரங்களைப் பெறாத அநேகர், வரங்கள் அவசியமில்லை என்றும், ஆவியின் வரங்கள் கொஞ்ச காலத்திற்கு மட்டும்தான் என்றும், தவறாகப் போதிக்கிறார்கள். இன்றும் அநேகருக்கு வரங்களின் மீது நம்பிக்கையும், விருப்பமும் இல்லை; அதைப்பற்றிய அறிவும் இல்லை!
1 கொரி. 12:8-10 வரையிலான வேதப்பகுதியில், ஞானத்தைப் போதிக்கும் வரம், அறிவை உணர்த்தும் வரம், விசுவாச வரம், குணமாக்கும் வரம், அற்புதங்களைச் செய்யும் வரம், தீர்க்கதரிசன வரம், ஆவிகளைப் பகுத்துணரும் வரம், பற்பல பாஷைகளைப் பேசும் வரம், வியாக்கியானம் பண்ணும் வரம் என ஒன்பது விதமான ஆவியின் வரங்களைப்பற்றி வாசிக்கிறோம். இந்த வரங்களையெல்லாம் கர்த்தர் உங்களுக்குத் தரும்படியாகவே வைத்திருக்கிறார்.
ஆவியின் வரங்கள் ஒன்பது இருப்பதைப் போலவே ஆவியின் கனிகளும் ஒன்பது இருக்கின்றன. அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் (கலா. 5:22,23) என்பவையே அவை.
ஆவியின் வரங்களும், கனிகளும் இணைந்தே உங்களுக்குள் காணப்பட வேண்டும். அநேகருக்கு ஆவியின் வரங்களிருந்தும் கனிகள் இல்லாததால் மனமேட்டிமையில், பெருமையில் விழுந்துபோய்விடுகிறார்கள். தேவபிள்ளைகளே, ஆவியின் வரங்களோடு, ஆவியின் கனியையும் பெற்று நீங்கள் கர்த்தரை மகிமைப்படுத்துவீர்களாக.
நினைவிற்கு:- “என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக” (உன். 4:16).