Appam, Appam - Tamil

நவம்பர் 05 – வேதவசனங்கள் மூலமாய்!

“அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள். நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்” (நீதி. 6:21,22).

கர்த்தர் நம்மோடுகூட பேசுவதற்கு ஆயிரக்கணக்கான வழிகள் உண்டு. கர்த்தர் இயற்கையின் மூலமாகப் பேசுகிறார்; வேதவசனங்களின் மூலமாகவும் நம்மோடுகூட பேசுகிறார். வேதவாக்கியங்கள் யாவும் தேவஆவியால் அருளப்பட்டிருக்கின்றன.

வேதத்தை தம்முடைய தாசர்கள் மூலமாக எழுதிக்கொடுத்த ஆண்டவர், வேதவசனத்தை அச்சிட்டு நம்முடைய கையிலே விநியோகித்த ஆண்டவர், அந்த வேதவசனத்தோடு தம்முடைய குரலையும் ஒன்றாக இணைத்திருக்கிறார்.

ஒருவேளை வேதப்புத்தகமானது மற்ற சாதாரண புத்தகங்களைப்போல காட்சியளிக்கக் கூடும். மற்ற புத்தகங்களைப்போலவேதான் பேப்பரிலே மையினால் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற புத்தகங்களைப்பார்க்கிலும் இந்த வேத புத்தகமானது மிக மிக விசேஷித்தது.

வேதப்புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்திலும் ஆவி இருக்கிறது. ஜீவன் இருக்கிறது. வேதவசனங்களெல்லாம் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறபடியினாலே அந்த ஆவியும் ஜீவனும் உயிர்ப்பிக்கிற வல்லமையைக் கொண்டுவருகிறது. வாசிக்கிறவர்களுடைய ஆத்துமாவிலே ஜீவனைக் கொண்டுவருவதுடன், அது வாசிக்கிறவர்களோடு பேசவும் செய்கிறது. எனவே, இந்த வேதப்புத்தகத்திற்கு ஈடு இணையே கிடையாது.

என்னுடைய தகப்பனாருக்கு சிறு வயதிலிருந்தே அதிகமாகப் படிக்கவேண்டுமென்ற ஒரு ஏக்கம் இருந்தது. வெளிதேசத்திலிருந்த அவருடைய தகப்பனார், எழுதும் கடிதங்களிலெல்லாம் “மகனே, நீ எம். ஏ படிக்க வேண்டும்” என்று திரும்பத் திரும்ப எழுதுவார். அப்படியே அவர் எம். ஏ படித்தார். இன்னொரு எம்.ஏ. படிக்க எண்ணினார். அதையும் படித்தார். வருமானவரிச் சட்டங்கள் எல்லாம் படித்தார்.

ஆனால், இந்தப் புத்தகங்களெல்லாம் அவருக்கு வெறும் உலக அறிவைக் கொடுத்ததே தவிர ஆத்துமாவிலே இளைப்பாறுதலை ஒருபோதும் கொண்டுவரவில்லை. தேவசமாதானத்தைக் கொண்டுவரவில்லை. இரட்சிப்பின் சந்தோஷத்தைக் கொண்டுவரவில்லை. பரலோக மகிமையைக் கொண்டுவரவில்லை.

ஆனால் இந்த வேதப்புத்தகமோ ஆவியும் ஜீவனுமாய் இருக்கிறது. அது அவரோடுகூட பேசினது. அவரைப் புதிய சிருஷ்டியாய் மாற்றினது. ஜீவனைக் கொண்டுவந்தது. அந்த ஜீவன் நித்திய நித்தியமாய் அவரை மேன்மைப்படுத்தினது. தேவவல்லமையை அவருக்குள்ளே கொண்டுவந்தது.

வேதத்தை எழுதிய ஆவியானவர் அதை நமக்கு விளக்கித் தருவதைப்போல வேறு யாராலும் நமக்கு விளக்கிச் சொல்ல முடியாது. “தகப்பனே என்னோடு பேசும் ஐயா, வேதத்தின் ஆழங்களை, மறைபொருட்களை எனக்கு சொல்லித் தாரும் ஐயா” என்று உண்மையாய் நாம் ஏக்கத்தோடு மன்றாடிக் கேட்கும்போது கர்த்தர் அந்த வேத வசனங்களின்மூலமாக நம்மோடுகூட பேசுவார். கர்த்தருடைய வாக்குத்தத்த வசனங்கள் நம்மை உற்சாகப்படுத்தி, தைரியமூட்டுகின்றன.

தேவபிள்ளைகளே, வேதத்தை விரும்பி, நேசித்து வாசியுங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங். 1:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.