நவம்பர் 04 – அந்நிய பாஷையின்மூலம் பேசுவார்!
“பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்” (ஏசா. 28:11).
பரிசுத்த ஆவியின் மூலமாக தேவனுடைய அபிஷேகம் நமக்குள் ஊற்றப்பட்டிருக்கிறது. இராஜாவின் ஜெய கெம்பீரம் நமக்கு வருகிறது. கர்த்தருடைய ஆவியானவர் நமக்குள்ளே தங்கியிருக்கிறதினாலே அவர் நம்மூலமாக பேசுகிறார். இவர் உலகத்திலிருக்கிறவனிலும் பெரியவர் (1 யோவா. 4:4). சர்வ வல்லமையுள்ளவர், இராஜாதி இராஜா!
உலகத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் உண்டு. ஆவியினால் நாம் நிரப்பப்படும்போது கர்த்தர் தமக்குச் சித்தமான பாஷையின் மூலமாக நம்மோடுகூட பேசுகிறார். நம்முடைய உள்ளத்தின் ஆழம் அதை அறிந்துகொள்ளுகிறது. ஆதி அப்போஸ்தலரின் நாட்களிலே எப்பொழுதெல்லாம் ஆவியை ஜனங்கள்மேல் ஊற்றினாரோ, அப்பொழுதெல்லாம் அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசினார்கள்.
ஒரு முறை என்னுடைய தகப்பனார் கொரியா தேசத்திற்குச் சென்று திரும்பியவுடன் தன் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள். போதகர் பால் யாங்கி சோ அவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் பிரசங்கிக்கும்போது, அந்த பிரசங்கத்தை அவருக்குப் பின்னாலுள்ள சிறுசிறு அறைகளுக்குள்ளே மொழி பெயர்ப்பாளர்கள் அமர்ந்து பற்பல பாஷைகளிலே மொழி பெயர்த்துக்கொண்டிருந்தார்களாம்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் காதுகளிலே மாட்டக்கூடிய சிறிய ஒலிபெருக்கி (earphone) கொடுக்கப்பட்டிருந்ததாம். அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிற சிறிய கருவியைத் திருப்பும்போது, அவர் பேசுகிற பிரசங்கம் பல மொழிகளிலே காதுகளில் கேட்குமாம்.
முதலில் ஜெர்மனி மொழி, பின்பு ஜப்பானிய மொழி, சீன மொழி, பிரஞ்சு மொழி, ஆங்கில மொழி என்று பல மொழிகள். எந்த மொழியில் நமக்குத் தேவையோ அந்த மொழிக்கு ஏற்றபடி அந்த கருவியைத் திருப்பிக்கொள்ளவேண்டும். அதுபோல, நாம் நம்முடைய உள்ளத்தைப் பரலோகத்திற்கு நேராகத் திருப்பி ஜெபிக்க ஆரம்பிக்கும்போது பரலோக பாஷைகளும், பூமிக்குரிய பாஷைகளும் நம்முடைய உள்ளத்திலே வருகிறது. நாம் தேவனோடு நெருங்கிக் கிட்டிச்சேர உதவி செய்கிறது.
சிலவேளைகளில் அந்நியபாஷையில் பேசும்போது, கர்த்தர் அதைப் புரிந்துகொள்ளுகிற வரத்தைக் கொடுக்கிறார். அது பாஷைகளை வியாக்கியானம் பண்ணுகிற வரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வரம் இருக்கும்போது நாமே அந்நியபாஷைகளை மொழிபெயர்க்க முடியும். மற்றவர்கள் பேசுகிற பாஷையையும் புரிந்துகொண்டு மொழிபெயர்த்துச் சொல்ல முடியும். அந்நியபாஷை பேசுகிறவர்கள் பொதுவாக அதிலேயே திருப்திபட்டு நின்றுவிடுகிறார்கள். வேதம் சொல்லுகிறது, “அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்” (1 கொரி. 14:13).
அந்நியபாஷையில் பேசச் செய்கிறவரும் ஆவியானவர்தான். பேசுகிற அந்த வார்த்தைகளுக்கு வியாக்கியானம் கொடுத்து தாய் மொழியிலே அதற்கான அர்த்தத்தை தருகிறவரும் அவர்தான். அதைத்தான், “ஆவியானவர் திருவுளம் பற்றினார்” என்று வேதத்தில் திரும்பத் திரும்ப வாசிக்கிறோம். தேவபிள்ளைகளே, கர்த்தர் அந்நிய பாஷையின் மூலமாக நம்மோடுகூட பேசுவார்.
நினைவிற்கு:- “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்” (மாற். 16:17).